தமிழ்நாட்டிற்கு என்எல்சி நிறுவனம் தேவையில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காத நிலையிலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கலந்து கொண்டார். விவாசாயிகளின் நலனுக்காக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு, புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் , “கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனம் தேவை இல்லை. அதை நான் கடிதம் மூலம் கொடுத்துள்ளேன். இந்த நிறுவனங்களால் அப்பகுதியில் பொதுமக்களுக்கு அதிகமாக உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. என்.எல்.சி நிறுவனம் அப்பகுதியில் வருவதற்கு முன்பு நிலத்தடி நீர் 08 அடியில் இருந்தது. தற்போது 1000 அடியில் இருக்கிறது.
1989 வரை தான் என்எல்சி நிறுவனம் மூலம் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு நிரந்தர வேலை கொடுத்துள்ளார்கள். பிறகு ஒருவருக்கு கூட நிரந்தர வேலை கொடுக்கவில்லை. தற்காலிகமான வேலை தான் கொடுத்துள்ளார்கள்.
தற்போது வரை 13,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி உள்ளார்கள். மேலும் 1,40,000 ஏக்கர் நிலத்தை அப்பகுதியில் உள்ள மக்கள் தரமாட்டோம் என்கிறார்கள். மொத்தமாக 1,50,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நினைக்கிறார்கள். பொதுமக்கள் நிலங்களை தரமாட்டோம் என்று கூறினால், அப்பகுதியில் உள்ள ஆட்சியர்கள், காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கொடுக்க வேண்டும் என பொதுமக்களை கட்டாயப்படுத்துகின்றனர் என பேசியுள்ளார்.