ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில், கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வர தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 101 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், 17 பேர் பயணம் மேற்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 53 பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், 14 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், 9 பணிகளின் செல்ஃபோன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும், 8 பயணிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உயிரிழப்புகள் எதுவும் உறுதி செய்யப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோரமண்டல் ரயில் வண்டி எண் 12841 நேற்று மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில்இன்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டது.
அதே நேரத்தில் மற்றோரு தடத்தில் வந்த யஷ்வந்தபூர் – ஹவுரா ரயில், தடம்புரண்டு விழுந்த பெட்டிகள் மீது மோதியது. இதில் ஹவுரா ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டது. கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.படுகாயமுற்ற 900-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி "ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதை கேட்டு பெறும் கவலை அடைந்தேன் . உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் பேசி மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். ” என தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்து தொடர்பாக அவசரகால கட்டுப்பாட்டு அறை எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது; அதன்படி விபத்து தொடர்பான விபரங்களுக்கு
044-25354771, 044-25330953, 044-25330952 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
ஒடிசாவில் உள்ள பயணிகளை மீட்பதற்க்காக சிறப்பு ரயில்கள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது பாதாரக் பகுதியிலிருந்து 250 பயணிகளுடன் ஒரு சிறப்பு ரயில் சென்னைக்கு கிளம்பியுள்ளது . விபத்து பகுதியில் துரித மீட்பு பணிகளுக்கு ராணுவம் விரைந்துள்ளது.
கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் குழு ஒடிசாவுக்கு சென்று இருக்கிறது. மேலும் அதிகாரிகள் குழு ஒடிசா விரைகின்றனர். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்து துறை செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் துறை செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நான்கு, ஐந்து நாட்கள் அங்கு தங்கி அவர்களுக்கான உதவிகள் செய்ய மாவட்ட அலுவலர்களும் அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.