செய்திகள்

வாகன சோதனையில் பறிமுதல் செய்த ஆட்டோ மாயம்... ஓட்டுனர் அதிர்ச்சி!

சேலம் சுபா

மீபமாக வாகன பரிசோதனையில் விதிகளை மீறும் வாகனங்களை  பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைக்கப்படும் வாகனங்கள் எவ்வித பயனுமின்றி குமிந்து வருவதை பார்க்கிறோம். நன்றாக உள்ள வாகனங்களை ஏலம் விட்டு அதற்கான அபராதத் தொகையை மீட்பதும் காவலரின் பணி. காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட வாகனம் பத்திரமாக இருக்கும் என நம்பியே பலர் சிறிது காலம் கழித்தும் அதை மீட்க வருகின்றனர். அப்படி வரும்போது அந்த வாகனம் மாயமானால்? சேலத்தில் நடந்த சம்பவம் இது.
       கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாகன சோதனைகளில் பறிமுதல் செய்த ஆட்டோவை காவலர்கள் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த போது திடீரென மாயமானது.. அபராத தொகையைக் கட்டி ரசீதுடன் வந்த ஆட்டோவின் ஓட்டுனர்  தனது ஆட்டோவைக் காணமல் அதிர்ச்சி அடைந்தார்.

      சேலம், அம்மாபேட்டை வித்யா நகர் மூன்றாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேலம் டவுன் பகுதியில் தனது ஆட்டோவை ஒட்டி வந்தபோது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்கள்  ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த ஆட்டோவுக்கு இன்சூரன்ஸ் இல்லை எனக் கூறி அதை பறிமுதல் செய்தனர். மேலும் கோட்டில் அபராதம் செலுத்தி விட்டு ஆட்டோவை எடுத்துச் செல்லுமாறும் ரவியிடம் கூறியுள்ளனர்.

      இதை அடுத்து ரவி எந்த பதிலும் சொல்லாமலும் அபராதம் கட்ட முயற்சி செய்யாமலும் அங்கிருந்து வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் கடந்த மாதம் பத்தாம் தேதி டவுன் போலீஸ் நிலையத்திலிருந்து ரவியின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் அவர் ஆட்டோ மீதான வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கோர்ட்டில் அபராத தொகையை செலுத்தி விட்டு ஆட்டோவை எடுத்துச் செல்லுமாறும் தெரிவித்துள்ளார்.

     அவர் அறிவுறுத்தியதன் பெயரில் கோர்ட்டில் ஆஜரான அவருக்கு ரூபாய் 1500 அபராதம் விதிக்கப்பட்டது. அதன் பிறகு ரவி அபராதத்  தொகையை செலுத்தி விட்டு நேற்று காலை சேலம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.  தான் அபராதம் கட்டிய ரசீதைக் காட்டி ஆட்டோவை தரும்படி அங்கிருந்த போலீசாரிடம் கேட்டுள்ளார்.  அதற்கு அங்கிருந்த போலீசார் அவரது ஆட்டோவை தேடியபோது நிறுத்தி இருந்த ஆட்டோ மாயமாகியிருப்பது தெரியவந்தது. இதனால் ரவி அதிர்ச்சி அடைந்தார். அப்போது இரண்டு ஆண்டுகளாக ஏன் ஆட்டோவை வாங்க வரவில்லை என்று அவரிடம் காவலர்கள் கேட்டபோது தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் அதனால் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். நீண்ட நாட்கள் ஆனதால் ஆட்டோ ஏலம் விடப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அபராதத் தொகை கட்டியதற்கான ரசீது வைத்துள்ளேன் இதனால் ஆட்டோ வேண்டும் என்று ரவி கேட்டபோது,  ஆட்டோ எங்கு இருக்கிறது என்று கண்டுபிடித்து தருகிறோம் என போலீசார் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

       இதற்கு என்ன தீர்வு என்பது காவலர்களுக்கு மட்டுமே தெரியும். இந்த விஷயத்தில் பொறுப்பு காவல் துறையினரதுதான். ஆனால் சில ஆயிரங்கள் தொகைக்காக பயந்து லட்சக்கணக்கான பொருளை இழப்பது சரியல்ல என்பதால் எந்த ஒரு விசயத்தையும் காலம் கடத்தாமல் செய்வதே நல்லது என்பது இதிலிருந்து தெரிகிறது.

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

SCROLL FOR NEXT