லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலையில் லாரி மீது மோதியதில் பேருந்து ஒன்று பக்கவாட்டில் கவிழ்ந்து சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிக்கு கீழ் வந்ததில் 7 பயணிகள் உயிரிழந்ததோடு 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அயோத்தியில் இருந்து வந்த தனியார் பேருந்து, அம்பேத்கர்நகர் நோக்கிச் செல்வதற்காக நெடுஞ்சாலையில் திரும்பும் போது எதிரில் வந்த வாகனத்திற்கு இடம் விடுவதற்காக ஒதுங்க யத்தனித்த போது, மாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இதனால் எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதியது, மோதலில் வேகம் அதிகமாக இருந்ததால் லாரி கவிழ்ந்து பேருந்து அதன் அடியில் புதைந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அயோத்தி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அஜய் ராஜா கூறுகையில், சாலை விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.
விபத்து நடந்ததுமே உடனடியாக மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணியில் ஈடுபட்டது.
"ஒரு டஜன் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான வாகனத்தில் சிக்கியவர்களை நாங்கள் வெளியேற்றுகிறோம். காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்," என்று மாவட்ட மாஜிஸ்திரேட் நிதிஷ் குமார் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார் என்று அவரது அலுவலகம் இந்தியில் ட்வீட் செய்துள்ளது.
காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்.