செய்திகள்

21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை - தமிழக அரசுக்கு மதுரை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு.

சேலம் சுபா

தெருவுக்குத் தெரு இருக்கும் மதுக்கடைகளினால் நம் தமிழ்நாட்டின் குடிமகன்கள் தினம் தங்கள்  வருமானத்தை குடிக்கே செலவழித்து குடும்பத்தை தத்தளிக்க வைப்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். மனைவி உழைத்து சம்பாதிக்கும் காசுகளும் டாஸ்மாக் கல்லாவில் விழும் அவல நிலை இன்று அதிக வீடுகளில் நடக்கிறது. இதில் படித்தவர் படிக்காதவர் என்ற வித்தியாசம் எதுவும் இல்லை.

      சமீபகாலமாக பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் போதைக்கு அடிமையாகி பையில் பாட்டிலுடன் பள்ளிக்கு வந்து தள்ளாடுவதையும், கற்றுத்தரும் ஆசிரியர்கள் முதல் பொறுப்பான பதவியில் இருக்கும் காவலர்வரை மது போதையில் புரள்வது வெட்கக்கேடான விஷயம். இதில் மிக முக்கியமான உடனடியாக தீர்வு தேட வேண்டிய நிலையில் இருப்பது போதையினால் தடம் மாறும் சிறார்களின் சீரழிவே.

டாஸ்மாக் குறித்த விதிமுறைகளின் மீதான மதுரை ஹைகோர்ட்டின் அதிரடி உத்தரவு நம் மனதில் சற்றே நம்பிக்கை தருவதாக உள்ளது. அதன் விபரம் இதோ.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில்   “தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயித்து மது விற்பனையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. மது அருந்தும் பழக்கத்தில் ஒட்டு மொத்த இந்தியாவில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. மது விற்பனைக்கு எதிராகவும் மதுக்கடைகளை மூடவும் வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. இருப்பினும் மதுவின் விற்பனை அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. எனவே தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கத் தடை விதிக்க வேண்டும். மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்க வேண்டும் என  உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

      இந்த வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது அரசு வழக்கறிஞர் ஆஜராகி “டாஸ்மாக் விற்பனை நேரத்தை முன்பிருந்ததைக் காட்டிலும் தற்போது 10 மணி நேரமாக குறைத்துள்ளோம். மது விற்பனையில் பல்வேறு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன என்று தெரிவித்திருந்தார்.

       இந்த நிலையில் இந்த வழக்கை பல கட்டங்களாக விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயணபிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு இது “ பய உணர்வை ஏற்படுத்துவதற்காக சட்டரீதியான எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. ஆனால் இந்த எச்சரிக்கைகள் எல்லாம் மது அருந்தும் விஷயத்தில் மிக குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன.குறிப்பாக 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையாக இருப்பது வருந்தத்தக்கது. எனவே மது விற்பதையும், வாங்குவதையும் கட்டுப்படுத்தி மது போதை பழக்கத்தை குறைக்க வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும்.

     தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மொத்த மற்றும் சில்லரை விற்பனையில் ஏகபோக உரிமையை கொண்டுள்ளது. மது விற்பனை மூலம் மாநில அரசு அதிக வருவாயை ஈட்டி வருகிறது. தமிழகம் முழுவதும் சில்லறை விற்பனை கடைகள் பெருகி வருகின்றன. இதனால் தனி நபர்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சீரழிக்கிறது.

பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் பெண்கள் என அனைவரும் மதுக்கடைகளை நோக்கிச் செல்லும் இந்நிலையில், இதைக் கட்டுப்படுத்துவதற்கு உரிமம் வைத்துள்ளவர் மட்டுமே மது வாங்க  அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். எனவே உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை விதிகளின்படி மதுபாட்டில்களின் லேபிள்களில் உரிய விபரங்கள் அச்சிடப்பட வேண்டும். அதேபோல “மது அருந்துவது தீங்கு விளைவிக்கும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்ற வாசகத்தை கொட்டை எழுத்தில் பெரிதாக அதில் பிரசுரிக்க வேண்டும்.

      டாஸ்மாக் கடை செயல்படும் நேரத்தைக் குறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை நாங்கள் மறுக்கவில்லை. இதனால் மது அருந்துதல் பெருமளவில் குறையவில்லை மாணவர்களும், 21 வயதுக்கு உட்பட்ட நபர்கள் கூட மது அருந்துவதால் மாநிலத்தில் சமூக பொருளாதார சூழல் கணிசமாக பாதித்து அதன் விளைவாக குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் சமூக கட்டமைப்பை உடைக்க வழிவகுக்கிறது என நாங்கள் கருதுகிறோம். இளம் தலைமுறையினர்  மது அருந்துவது அவர்களுக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் நீண்ட காலத்துக்கும் தீங்கானது.

     மது ஒழிப்பை சமூக பொருளாதார பொது சுகாதார பிரச்னையாக கருத வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் முயற்சிகளும் தேவைப்படுகின்றன. இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்பதை இந்த கோர்ட்டு மறந்துவிடவில்லை. இருந்தபோதும் பொது நலனை கருத்தில் கொண்டு கீழ்கண்ட பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கிறோம் அதன் விவரம் வருமாறு.

   இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை விற்கவும் வாங்குவதற்கும் உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்குவது, மது பாட்டில்களில் உரிய விதிமுறைகள் இடம்பெறச் செய்வது, புகார்களை தமிழில் பதிவு செய்வது, அதற்கு மது பாட்டில் லேபிள்களில் தமிழில் அச்சிடுதல், விலைப் பட்டியல் உள்ளிட்ட விபரங்களையும் அனைத்து வாடிக்கை யாளர்களும் அறியும் வகையில் அறியும் வண்ணம் இடம்பெற செய்வது, டாஸ்மாக் விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதி செய்வது,  21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதில்லை என்பதை மாநில அரசு உறுதி செய்வது, மேற்கண்டவற்றுடன் பொதுநலன் கருதி டாஸ்மாக் கடைகளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

       நீதிபதிகளின் இந்த உத்திரவுகள் நடைமுறைக்கு வந்தால் மதுவினால் நிகழும் குற்றங்கள் குறையும் வாய்ப்பு உள்ளது நடக்குமா?  பொறுத்திருந்து பார்ப்போம்.

70 வயதுக்குப் பிறகும் அறிவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

SCROLL FOR NEXT