வருகிற ஜூலை மாதம் 12ஆம் தேதி, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய, சந்திராயன் - 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த 2008ல், சந்திராயன் - 1 விண்கலத்தை நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலமானது நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்து உறுதி செய்தது. மேலும் நிலவை முழுமையாகத் தெரிந்து கொள்ள விண்கலத்தை நிலவில் இறக்கி ஆய்வு செய்வதற்காக சந்திராயன் - 2 என்ற விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. இந்த விண்கலமானது 2019 ஜூலை இரண்டாம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணையானது சுமந்து சென்றது.
ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, விண்கலத்திலிருந்த லேண்டெர் சரியாக தரையிறங்க முடியாமல், நிலவில் மோதி செயலிழந்தது. ஆனால் விண்கலத்தின் ஆர்பிட்டர் என்ற மற்றொரு பகுதி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தான், ரூபாய் 615 கோடி செலவில் சந்திராயன் மூன்று திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த முடிவு செய்தது. இம்முறை விண்கலத்தில் எந்த தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்படாத வகையில் இதை உருவாக்கியுள்ளதாகவும், மேலும் இதற்காகவே இரண்டு மூன்று முறை சோதனை ஓட்டத்தையும் செய்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திராயன் மூன்றின் சோதனை ஓட்டமானது பெங்களூருவிலுள்ள யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்திலிருந்து, கடந்த ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த சோதனையை EMI-EMC சோதனை என்று சொல்வார்கள். இது செயற்கைக் கோளை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ப்ரொபல்ஷன், லேண்டர் மற்றும் ரோவர் என சந்திராயன் 3ல் மொத்தம் மூன்று பகுதிகள் உள்ளது. ப்ரொபல்ஷன் பகுதியானது விண்கலத்திலுள்ள லேண்டெர் மற்றும் ரோவரை நிலவில் மொத்தம் 100 கிலோ மீட்டர் தொலைவு வரை கொண்டு செல்லும். லேண்டர் பகுதி, நிலவில் தரையிறங்குவதற்கும், ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்வதற்கும் பயன்படுத்தப்படும் கருவிகளாகும். இந்த மூன்று பகுதிகளுக்கும் இடையேயுள்ள ரேடியோ அலைவரிசை சரியாக உள்ளதா என்பதும் பரிசோதிக்கப் பட்டுள்ளது.
சந்திராயன் - 3 விண்கலத்தின் கிரையோஜனிக் எஞ்சின் சோதனை, அதாவது இரண்டாம் கட்ட சோதனை கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. இந்த சோதனை மகேந்திரகிரியிலுள்ள இஸ்ரோ மையத்தில் நடத்தப்பட்டது. சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்ததால் சந்திராயன் மூன்று விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலமாக வருகிற ஜூலை 12ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திலிருந்து ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது 42 நாட்கள் விண்ணில் பயணித்து, லேண்டெர் பகுதி ஆகஸ்ட் 22ஆம் தேதி நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சந்திராயன் - 3 திட்டம் வெற்றி பெற்றால், நிலவின் பல ரகசியங்கள் வெளிவரும் என இஸ்ரோ நம்புகிறது.