சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. அது மன்னர்களால் உருவாக்கப்பட்ட கோயில் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கருத்து தெரிவித்தார்.
சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆணையர் குமரகுருபரர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் நடராஜர் கோவிலின் தீட்சிதர்கள் குறித்து பேசினார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் தீட்சிதர்கள் நீதிமன்ற அவமதிப்பு
வழக்கு தொடர்வதற்கு யாரும் இங்கு தடையாக இல்லை. இந்து சமய அறநிலைத் துறையின் செயல்பாட்டில் தவறு இருந்தால் தாராளமாக நீதிமன்றம் செல்லலாம். தீட்சிதர்களால் உருவாக்கப்பட்ட கோவில் அல்ல சிதம்பரம் நடராஜர் கோவில். இது நமது மன்னர்களால் , முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோவில்.
கோவிலின் வருமானங்கள் தொடர்பாக முறையாக கணக்கு கேட்கும் போது வழங்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகளை கேள்விகளாக கேட்கும் போது பதில் சொல்ல வேண்டியது அவர்களின் கடமை
மன்னர்களால் கோவிலில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள நகைகள், சொத்துக்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களின் நிலையை ஆய்வு செய்வது இந்து சமய அறநிலை துறையின் கடமை. தீட்சிதர்கள் இதற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.
அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம். இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் எந்த வித அதிகார துஷ்பிரயோகமும், அத்துமீறலும் செய்யவில்லை. ஞாயத்தின் படி நடக்கத்தான் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ள இடம் முழுக்க அரசினுடைய நிலம். இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் குழு அமைக்கப்பட்டு இது தொடர்பாக முழுமையாக ஆய்ந்து அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இப்போது நகைகள் சரி பார்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணை தொடர்வதால் முழு தகவலையும் அளிப்பது ஏற்புடையதாக இருக்காது. ஆனால் திருக்கோவிலின் இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.