மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான அஜித் பவாரை திடீரென சந்தித்துப் பேசியுள்ளார்.
மகாராஷ்டிர மாநில அரசியல் விவகாரங்கள், நடப்பு அரசியல் மற்றும் கூட்டணி கட்சி என்ற முறையில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து அஜித் பவாரிடம், சவாண் பேசியதாக கூறப்படுகிறது.
அஜித் பவாரை, அவரது இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சவாண் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணி தேர்தலில் தொகுதி உடன்பாடு செய்துகொண்டு போட்டியிடுவது மற்றும் மாநிலத்தின் நடப்பு அரசியல் விவகாரங்கள் குறித்து இருவரும் பேசியதாக தெரியவந்துள்ளது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தொகுதி உடன்பாடு மிக அவசியம் என்று கூறிய சவாண், வரும் ஜூலை மாதம் 17 ஆம் தேதி சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், மகாராஷ்டிர விகாஸ் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.
மகாரஷ்டிர விகாஸ் கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பின்னர் அசோக் சவான் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரை நான் சந்தித்துப் பேசினேன். தகுதியின் அடிப்படையில் தேர்தலில் தொகுதிப் பங்கீடு செய்துகொள்வது குறித்து பவாரிடம் விளக்கினேன். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் காங்கிரஸ் கட்சியின் எண்ணங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டேன் என்றும் தெரிவித்தார்.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக மகாராஷ்டிர விகாஸ் அகாதியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அப்போது மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது, சட்டப்பேரவையில் செயல்படும் விதம் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.