தொடர் விடுமுறை என்பதால், சொந்த ஊர்களுக்குச் செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
மேல்படிப்பிற்காகவும், வேலைக்காகவும் பலரும் சொந்த ஊரை விட்டு வெளியூர்களில் தங்கி வருகின்றனர். விடுமுறை விட்டால் போதும், உடனே ஊருக்கு கிளம்ப வேண்டியது தான் என புறப்பட்டு விடுவார்கள். இதன்காரணமாக வழக்கமான வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும்.
அப்படி, சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை சுதந்திர நாள் விடுமுறை என்பதால், இடையில் திங்கட்கிழமை விடுப்பு எடுத்து, 4 நாட்கள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, நேற்றிரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இந்நிலையில், தொடர் விடுமுறையை சமாளிக்க சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த பேருந்துகளில் பொதுமக்கள் பயணித்தனர்.
இதனிடையே, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், மற்ற நாட்களை விட பல மடங்கு கட்டணத்தை உயர்த்தியிருப்பதாக, பயணிகள் குற்றஞ்சாட்டினர்.