பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்குள் நேற்று மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் புகுந்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்த நபர் அறையின் கதவை அடைக்க முயன்றபோது அங்கு பணியில் இருந்த அலுவலக ஊழியர் விஜய் என்பவர் அவரைத் தடுத்து, இழுத்துக்கொண்டு வெளியே வந்தது சாலையில் வேகமாகத் தள்ளி விடுகிறார். அதைத் தொடர்ந்து அந்த மர்ம ஆசாமி சிறிய காயத்தோடு கீழே விழ, அவரை அலுவலக ஊழியர் அங்கிருந்து விரட்டி அடிக்கிறார்.
அதைத் தொடர்ந்து, மர்ம நபர் ஒருவர் சட்டமன்ற அலுவலகத்துக்குள் புகுந்தது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் விஜய் புகார் செய்திருக்கிறார். அந்தப் புகாரில், ‘மாலை 5.47 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எங்கள் அலுவலகத்துக்குள் நுழைந்து, நான் தனியாக இருப்பதை அறிந்த, கதவை உள்பக்கமாகத் தாழ்ப்பாள் போட முயன்றார். அதனால் நான் அவரை விரட்டி விட்டேன். எனக்கு அவர் மீது சந்தேகமாக இருக்கிறது. அவர் யார்? எதற்காக அலுவலகத்தில் நுழைந்தார் என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். அதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் எம்எல்ஏ வானதி சீனிவாசனின் சட்டமன்ற அலுவலகத்தில் ஒரு நபர் நுழைவதும், அவரை வெளியே விரட்டிக்கொண்டு வரும் அலுவலக ஊழியரும், அதைத் தொடர்ந்து அந்த மர்ம நபர் சாலையில் தள்ளிவிடப்படும் காட்சிகளும் பரவலாக வெளிவந்தன.
இந்த நிலையில், அந்த அடையாளம் ஆசாமி கோவை அவினாசி சாலை, அண்ணா சிலை சிக்னல் அருகில் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறார். அவரது உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் விசாரித்தபோது, ‘அலுவலகத்தில் புகுந்த அந்த நபர் யார்? எந்தப் பின்னணியில் அவர் அலுவலகத்தில் நுழைந்தார்? அவரது நோக்கம் என்ன என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. அவர் யார் என்ற விவரம் காவல் துறைக்கும் தெரியவில்லை. அந்த நபர் அடிபட்டு இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அவர் யார் என்று காவல்துறை கண்டறிந்து, எதற்காக அலுவலகத்தில் நுழைந்தார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்’ என்று கூறி இருக்கிறார்.