“பொதுப் பாதையை ஆக்கிரமித்து கோயில் கட்ட வேண்டும் என எந்தக் கடவுளும் கேட்கவில்லை. கடவுளின் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டி கோர்ட்டின் கண்களை மறைக்க முடியாது. கோயில் ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அதனை அகற்ற கோர்ட்டுக்கு உரிமை உண்டு. எனவே, கோயில் நிர்வாகம் கட்டியுள்ள கட்டுமானங்களை இரு மாதங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்.” - கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த அதிரடித் தீர்ப்பின் அடிப் படையில் பத்து மாதங்கள் கழித்து ஆக்கிரமிப்புக் கோயில் பகுதிகள் இடிக்கப்பட்டச் சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் நகரில் மத்தியில் மெயின் ரோட்டின் ஓரம் நூறாண்டுக்கு மேலாக பழைமை வாய்ந்த பலபட்டறை மாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மே மாதம் தொடங்கி சுமார் மூன்று மாத காலம் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது கோயில் வடக்கு பகுதியில் இருந்த மக்கள் வந்து செல்லும் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கோயில் கட்டடம் கட்டப்பட்டதாக கூறப் படுகிறது. இதனால், பாதிப்புக்குள்ளான பொதுமக்களில் ஒருவரான நாமக்கல்லைச் சேர்ந்த பாப்பாயி என்பவர் பொதுப்பாதை ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் கட்டடத்தை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார். பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அளிக்கப்பட்டத் தீர்ப்புதான் மேலே சொன்னது.
இந்த நிலையில் தீர்ப்பு வந்து 10 மாதங்களுக்குப் பிறகு கோயில் ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடிக்கும் பணியில் நகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். பொக்லைன் வாகனங்கள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு வடக்குப்புறச் சுவர், செல்லாண்டிஅம்மன் கோயில், உற்சவர் சிலைகள் வைக்கும் அறை உள்ளிட்ட 20 அடி நீளம் 12 அடி அகலத்துக்கு உட்பட்ட பொதுப் பாதையில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்கும் பணியை மேற்கொண்டனர். இந்தப் பணியில் 100க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
பழைமையான கோயில் இடிக்கப்படும் நிலையில் பக்தர்கள் மூலம் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க கோயிலைச் சுற்றிலும் நாமக்கல் டி எஸ் பி சுரேஷ், இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பலபட்டறை மாரியம்மன் கோயிலில் ஒரு பகுதி இடிக்கப்பட்ட சம்பவம் பக்தர் களிடையே அதிர்ச்சியைத் தந்தாலும் பொதுமக்களுக்கு பாதிப்பைத் தரும் வகையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படுபவை கடவுளின் கோயிலாகவே இருந்தாலும் சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்பதற்கு இந்தச் சம்பவம் சாட்சி.
இதேபோல் தனியார் ஆக்கிரமித்த பொது இடங்களின் மீதும் சட்டம் தன் கடமையைச் செய்தால் நிறைய ஆக்கிரமிப்புகள் விலகி மக்களுக்கு நன்மை தரும் ஏற்படும். செய்யுமா?