திண்டுக்கல் அருகே உள்ள கூவனூத் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சின்ராஜ். இவர் ஒரு ஏக்கரில் கரும்பும், 2 ஏக்கரில் மஞ்சளும் பயிரிட்டிருந்தார். தற்போது அறுவடை நடந்துவருகிறது. கரும்பை நீள துண்டுகளாக வெட்டி அட்டைப் பெட்டியில் அடைத்து வெளிநாடுகளுக்கு விமானத்தில் அனுப்பி வருகிறார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நாம் வெகு விமரிசையாக கொண்டாடுகிறோம். தேவையான கரும்பு, மஞ்சள் கொத்தை இங்கேயே நாம் விவசாயம் செய்துகொள்கிறோம்.
அதேபோல் வெளிநாடு வாழ் தமிழர்களும் அவர்கள் வாழும் அந்தந்த நாட்டில் ஆர்வத்தோடு பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதற்கு தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றை இங்கிருந்து பெற வேண்டிய நிலை உள்ளதால், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு நிலக்கோட்டை பகுதியில் வழக்கமாக தினமும் பூக்களை சிங்கப்பூர், துபாய்க்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள், சீசன் வியாபாரமாக கரும்பை கொள்முதல் செய்து கண்டெய்னர் மூலம் 60 டன் கரும்பை கப்பலில் துபாய்க்கு ஏற்றுமதி செய்தனர். இதையடுத்து கூடுதல் ஆர்டர் கிடைத்ததால் தற்போது பொங்கலுக்கு சில தினங்களே உள்ள நிலையில் கப்பலில் சென்றால் தாமதம் ஆகும் என்பதால் விமானத்தில் கரும்பு அனுப்பி வைக்கப்படுகிறது.
கரும்பு மற்றும் மஞ்சள் கொத்துகள் அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து திருச்சி விமான நிலையம் சென்று விமானம் மூலம் லண்டன், பாரீஸ், துபாய்க்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இது குறித்து விவசாயி சின்ராஜ் கூறியதாவது:
கடந்த ஆண்டும் வெளிநாடுகளுக்கு கரும்பு ஏற்றுமதி செய்தேன். நல்ல லாபம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் ஆர்டர்கள் நிறைய கிடைத்ததால் ஏற்றுமதி செய்கிறேன். கரும்புத் தோகையை அகற்றி விட்டு நீள துண்டுகளாக வெட்டி பத்து கிலோ கரும்பு துண்டுகளை ஒரு பெட்டியில் அடைத்து அனுப்புகிறோம்.
விமானத்தில் இடம் கிடைப்பதை பொறுத்து தினமும் 500 கிலோ கரும்பை அனுப்பி வருகிறேன். இவ்வாறு சின்ராஜ் கூறினார்.
பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடுவது தமிழர்களாகிய நமக்கு பெருமைதானே...