உலகின் உயரமான போர்க்களத்தில் முதல் பெண் ராணுவ வீராங்கனை!
உலகின் மிக உயரமான சியாச்சின் போர்களத்தில் முதல் முறையாக பெண் ராணுவ வீராங்கனை பணியமர்த்தப்பட்டுள்ளார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது சியாச்சின் சிகரம். இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சியாச்சினில்தான் உலகத்திலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள குமார் போஸ்ட் என்ற ராணுவ நிலை உள்ளது.
கடந்த 1984-ல் இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்தினர் சியாச்சின் சிகரத்தில் மோதிக் கொண்ட பிறகு, அப்பகுதியில் இந்திய வீரர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய ராணுவத்தின் ‘ஃபயர் அண்ட் ஃப்யூரி கார்ப்ஸ்’ என்ற படைப்பிரிவைச் சேர்ந்த கேப்டன் சிவா சவுகான் என்றபெண் வீராங்கனை முதல் முறையாக 2023 ஜனவரி 3 ம்தேதி சியாச்சினில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
15,632 அடி உயரத்தில் உள்ளஉலகின் மிக உயரமான போர்க்களமான குமார் போஸ்ட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.குமார் போஸ்ட்டில் பணியமர்த்தப்பட்ட முதல்பெண் ராணுவ வீரர் கேப்டன் சிவாசவுகான் ஆவார். பல்வேறு கடின பயிற்சிகளுக்கு பின்னர் இப்பணியை அவர் ஏற்றுள்ளார்.அவர் ராஜஸ்தானின் உதய்பூரில் பள்ளிப்படிப்பை முடித்தார் மற்றும் உதய்பூரில் உள்ள NJR இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சிவில் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.
செவித்திறன் குறைபாட்டை வென்ற மாணவி!
2023 ம் ஆண்டு மார்ச் 3 உலக செவித்திறன் தினம். இந்நாளில் கேரள மாநிலம் கோட்டயம் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் படித்து வரும் மாணவி ரிஸ்வான் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட உலக செவித்திறன் தின போஸ்டரில் இடம் பிடித்து சாதித்து உள்ளார். தனது செவித்திறன் குறைபாட்டை சமாளித்து மருத்துவம் படித்து வருவதால் இந்த பெருமை.
உச்ச நீதிமன்றத்தில் சைகை மொழியில் வாதாடிய முதல் பெண்!
இந்திய நீதிமன்றங்களில் இதுவரை சைகை மொழியில் யாரும் வாதாடியதில்லை. இதற்கு நீதிமன்ற வரலாற்றில் முதன்முதலாக 2023 செப்டம்பர் 22-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அனுமதி அளித்தார் சந்திரசூட். தன் ‘மொழி'யில் வாதங்களை முன்வைத்து அனைவரின் புருவங்களை உயர்த்த வைத்தவர் பெங்களூரைச் சேர்ந்த சாரா சன்னி.
இவர்தான் இந்தியாவின் முதல் செவி மற்றும் பேச்சுத்திறன் மாற்றுத் திறனாளி வழக்கறிஞர். மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில் ஆர்வம் காட்டிவருபவர் இந்த பெண்மணி..
கால்களால் கார் ஓட்டி லைசென்ஸ் பெற்ற சாதனை பெண்!
இந்தியாவிலேயே முதன் முறையாக கால் மூலம் கார் ஓட்டி டிரைவிங் லைசென்ஸ் பெற்று சாதித்த உள்ளார் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஜிலுமோல் மரியதாஸ்.மாற்றுத்திறனாளியான இவருக்கு இரண்டு கைகள் இல்லை. சங்கனாச்சேரியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கருணை இல்லத்தில் வளர்ந்த ஜிலுமோல், தனது கைகளால் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும் செய்ய கால்களுக்கு பயிற்சி அளித்தார்.
தன்னம்பிக்கை, விடாமுயற்சி காரணமாக தனது இரண்டு கால்கள் மூலம் கார் ஓட்டக் கற்றுக் கொண்டார். இவரின் ஆர்வத்தை கண்டு நண்பர்கள் அவருக்கு ஒரு கார் வாங்கி கொடுத்தார்கள். அதை சாலையில் ஓட்ட லைசென்ஸ் வேண்டி இடுக்கி ஆர்டிஓ அலுவலகத்தில் டிரைவிங் லைசென்ஸ் பெற முறைப்படி விண்ணப்பித்தார். இந்திய வாகன சட்டப்படி கால்கள் மூலம் கார் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்று அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட து. இதன் பின்னர் லைசென்ஸ் பெற நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 04/10 / 2018 அன்று லைசென்ஸ்
பெற கோர்ட் ஆர்டர் வழங்கப்பட்டது.. ஆனால் வழக்கமான கார்களை அவரால் ஓட்ட முடியாது என மீண்டும் லைசென்ஸ் வழங்க மறுத்தார்கள். இது விஷயமாக கேரள மாற்றுத்திறனாளிகள் ஆணையத்திடம் முறையிட்டார் அவர்கள் ஆலோசனை படி மாற்றி வடிவமைக்கப்பட்ட கார் ஓட்டி வரச் சொல்லி லைசென்ஸ் தர சம்மதித்தார்கள. டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டும் என்ற அவரது இழுபறியான தீர்மானம் பலனளிக்க 6 ஆண்டுகள் ஆனது, 2023 ம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி, பாலக்காட்டில் நடந்த விழாவில் முதல்வர் பினராயி விஜயன் அதை அவரிடம் வழங்கினார்.