செய்திகள்

நாய்க்கு வளைகாப்பு! நாமகிரிப்பேட்டை அருகே விசித்திரம்!!

சேலம் சுபா

பெற்ற மகள்களுக்கே வளைகாப்பு நடத்துவதை வீண் செலவு என்று கருதும் மனப்பான்மை உள்ள நாகரீக பெற்றோர்கள் இருக்கும் இந்தக் காலத்தில், மகளைப் போல் வளர்த்து வரும் பிரியமான நாய்க்கு சீரும் சிறப்புமாக வளைகாப்பு நடத்தி வந்த விருந்தினருக்கு விருந்து அளித்த பெரிய மனது உடைய குடும்பத்தினரை என்னவென்று சொல்வது? மனிதருள் மாணிக்கம் என சொல்லலாமா? அவர் யார்?

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கட்டிடத் தொழிலாளியாக பணிசெய்கிறார். இவர் தனது வீட்டில் வைரவன், பைரவி என்ற இரு நாய்களை வளர்த்து வருகிறார். அந்த ஜீவன்களை வெறும் விலங்குகளாக பார்க்காமல் தனது குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர் களைப்போல அன்புடன் கவனித்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் பைரவி கர்ப்பம் தரித்தது. இதை அடுத்து பைரவிக்கு வளைகாப்பு நடத்த ரமேஷ் முடிவு செய்தார். இது தொடர்பாக நாள் குறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி நேற்று பைரவிக்கு வளையல், பூ அணிவித்து அலங் கரித்தனர். மேலும் வந்திருந்தவர்களின் வாழ்த்துகளோடு சந்தனம், குங்குமம் பூசி வளைகாப்பும் விமரிசையாக நடத்தினர். இதில் கலந்துகொண்டவர்களுக்கு தலைவாழையிலை போட்டு  3 வகை கலவை சாதம் மற்றும் இனிப்பு காரம் வைத்து விருந்து வைத்தனர்.

வளைகாப்பில் கலந்து கொண்டவர்கள் பைரவிக்கு மொய் வைத்தது  நெகிழ வைத்தது. பெற்ற மகள் போல எண்ணி கர்ப்பம் தரித்த வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினரை அப்பகுதி மக்கள் பாராட்டி வாழ்த்திச் சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பலர் எதிர்மறை விமர்சனம் செய்தாலும் “புவியில் பிறக்கும் உயிர்கள் அனைத்தும் சரி சமமே” என்று நிரூபித்த பெரிய மனதுக்காரர் ரமேஷும் அவர் குடும்பத்தினரும் பாராட்டுக்கு உரியவர்களே.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT