எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

‘பிரச்னையை திசை திருப்ப அதிமுகவை சீண்ட வேண்டாம்’ எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!

கல்கி டெஸ்க்

‘தமிழக மக்களின் பிரச்னைகளை சரிசெய்யாமல், தான் தேசியத் தலைவர் என்ற பிம்பத்தை காட்டிக்கொள்வதற்காக ஸ்டாலின் ஏதேதோ பிற மாநில பிரச்னைகளைத் தொடர்ந்து கூறி வருகிறார். மாநில உரிமையை அதிமுக எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காது. திமுகவைப் போல் பதவி சுகத்துக்காக சந்தர்ப்பவாதியாக எப்போதும் இருக்காது’ என்று கூறி இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "பொய் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்து, கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தலை சந்தித்து பெரும்பான்மையைவிட, எட்டு சட்டமன்ற உறுப்பினர்களை கூடுதலாகப் பெற்றதால் தமிழகத்தைப் பிடித்த பிணி இந்த திமுக ஆட்சி என்று மக்கள் வேதனையுடன் இருக்கிறார்கள். அதிமுக தொடர்ந்த சட்டப் போராட்டத்தின் விளைவாக, காவிரியில் தண்ணீர் பெறும் உரிமையை உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் பெற்று, ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் டெல்டா பாசனத்துக்கு பங்கு நீர் கிடைக்கப்பெற்று அதிமுக ஆட்சியில் சம்பா, குறுவை சாகுபடி சிறப்பாக செய்யப்பட்டு வந்தது. ஆனால், திமுக அரசு இந்த ஆண்டு டெல்டா பாசனத்துக்குத் திட்டமிடாமல், தன் ஆட்சியின் சாதனையைக் காட்டுவதற்காக, ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்பட்டது.

திமுக அரசு கூறியதை நம்பி 5.5 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர் செய்யப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு போதிய அளவு தண்ணீர் திறக்காத காரணத்தால், கடை மடை வரை தண்ணீர் சென்று சேராமல் ஒரு லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர் கருகியது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியதாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகத்தில் இருந்து பங்கு நீரை பெறாததால் 4.5 லட்சம் ஏக்கர் பயிர் கருகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், டெல்டா பகுதி விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி முதல்வர், நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டுமென்றால், டெல்லி நிர்வாக மசோதாவுக்கு தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே, தன் மாநில உரிமைக்காக கூட்டணியில் இடம்பெற்றார். அதே அடிப்படையில், முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்டா பகுதி விவசாயிகள் நலனில் அக்கறை இருந்திருந்தால் உச்ச நீதிமன்ற வலுவான தீர்ப்பின்படி, தமிழக பாசனத்துக்கு கர்நாடக காங்கிரஸ் உடனடியாக காவிரியில் வழங்க வேண்டிய பங்கு நீரை வழங்கினால்தான், பெங்களூருவில் நடைபெறும் கூட்டணிக் கூட்டத்தில் கலந்துகொள்வேன் என்று நிர்பந்தப்படுத்தி இருந்தால், காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்திருக்கும். டெல்டா மாவட்ட விவசாயிகளும் கஷ்டத்துக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். இது, டெல்டா விவசாயிகளுக்கு திமுக அரசு செய்த மிகப் பெரிய துரோகமாகும்.

தன் குடும்பம் பதவிகளில் இருக்க வேண்டும்; தன் குடும்பத் தொழில்கள் கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கக்கூடியவருக்கு, அதிமுகவைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்யாமல் ஸ்டாலின், தான் தேசியத் தலைவர் என்ற பிம்பத்தை காட்டிக்கொள்வதற்காக ஏதேதோ பிற மாநில பிரச்னைகளைத் தொடர்ந்து கூறி வருகிறார். மாநில உரிமையை அதிமுக எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காது. திமுகவைப் போல் பதவி சுகத்துக்காக சந்தர்ப்பவாதியாக எப்போதும் இருக்காது. ஆட்சியில் இருக்கும் எஞ்சிய காலத்தில், இனியாவது மக்களுக்கு நல்லது செய்ய திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிந்திக்கட்டும். திசை திருப்புவதற்காக அதிமுகவை சீண்ட வேண்டாம் என எச்சரிக்கிறேன்" என்று அவர் அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார்.

"பயிற்சி செய் அல்லது செத்து மடி": ப்ரூஸ் லீயின் அறிவுரை!

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

SCROLL FOR NEXT