இரண்டாம் உலகப் போரின்போது போலந்து நாட்டைப் பிடிக்க சோவியத் யூனியன் படைகள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தன. அப்போது போலந்து நாட்டின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த ஆடம் கிஸாஸ்கி என்பவர் தனது நான்கு மகன்களையும் அந்நாட்டை விட்டுச் வெளியேறிச் சென்றுவிடும்படிக் கூறினார். அதைத் தொடர்ந்து தனக்குச் சொந்தமான அனைத்து வெள்ளிப் பொருட்களையும் தனது வீட்டின் ஒரு பாதாள அறையில் வைத்துப் புதைத்து விட்டு அவரும் தப்பித்துச் சென்று விட்டார். இந்தச் சம்பவம் நடைபெற்றது 1939ம் ஆண்டு செப்டம்பர் மாதம்.
போலந்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற நான்கு சகோதரர்களும் வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ஆடம் கிஸாஸ்கியின் பேரன் ஜேன் என்பவர், எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாத்தா ரகசிய அறையில் புதைத்துவைத்த வெள்ளி புதையலைத் தற்போது கண்டுபிடித்துள்ளார். இந்த வெள்ளிப் புதையல் கண்டுபிடிப்பு குறித்து ஜேன் கூறுகையில், ‘எனது முன்னோர்கள் வாழ்ந்த போலந்து நாட்டின் வீட்டில் வெள்ளிப் பொருட்களை புதைத்து வைத்துள்ள இடம் குறித்து எனது தந்தை கஸ்டாவ் அவரது கையால் வரைந்த வரைபடம் ஒன்றை வைத்திருந்தார். அதை வைத்துக்கொண்டு நான் கடந்த 2019ம் ஆண்டு போலந்து சென்று எங்கள் குடும்பம் வாழ்ந்த வீட்டைப் பார்த்தேன். அது புதர் மண்டிக் கிடந்தது. எனது தந்தை கூறிய வெள்ளிப் புதையல் பாதாள அறை எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க மிகவும் கடினமாக இருந்தது. அதன் பின்னர் அதே ஊரில் பள்ளி முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற 92 வயது முதியவர் ஒருவர் எங்களுக்கு உதவ முன்வந்தார். அவர் அளித்த தகவலின்படி தொடர்ந்து மூன்று நாட்கள் நாங்கள் பாதாள அறையைத் தேடி, இறுதியில் வெள்ளிப் புதையலைக் கண்டுபிடித்துவிட்டோம். அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளி பொருட்களையும் மீட்டோம். அதில் நிறைய வெள்ளி பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன. சுமார் எண்பது ஆண்டுகளைக் கடந்த அந்தப் பொருட்கள் பல தலைமுறைகளைக் கடந்த பொக்கிஷங்கள்’ என்று ஜேன் கூறி உள்ளார்.
ஜேன், தென் ஆப்பிரிக்காவில் கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் சட்டத் துறை பேராசிரியராகப் பணி புரிந்தவர். அவர் தனது கேப் டவுன் பல்கலைக்கழக இணைய தளத்தில் இந்த சுவாரசியமான தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார். அதோடு, தான் கண்டுபிடித்த அந்த வெள்ளிப் புதையலில் சிறிய பால் குடுவை, தங்க சிலுவை பதிக்கப்பட்ட செயின், வேட்டைத் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.