முன்னாள் UFC சாம்பியன் ஜார்ஜெஸ் செயின்ட் பியர் என்பவரை தனது பயிற்சியாளராக, தொழில்நுட்ப ஜாம்பவான் எலான் மஸ்க் நியமித்திருக்கிறார்.
எலான் மஸ்கின் ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் வேறு ஒரு புதிய தளத்தை உருவாக்கி வருகிறார் என்ற வதந்திகளைத் தொடர்ந்து, எலான் மஸ்க் அவரை சண்டைக்கு வருமாறு அழைத்தார். இதைத்தொடர்ந்து இரண்டு தொழில்நுட்ப பில்லியனர்களும் கடந்த வாரம் "கூண்டுப் போட்டிக்கு" ஒப்புக்கொண்டனர்.
இந்த போட்டிக்கு லாஸ் வேகாசில் உள்ள UFC அபெக்ஸ் மையம் போட்டியின் இடமாக இருக்கும் என, UFC தலைவர் 'டயானா வைட்டல்' அங்கீகரித்தார். மார்க் ஜுக்கர்பெர்க் ஏற்கனவே தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்றவர். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தனது முதல் ஜியு ஜிட்சு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். ஆனால் எலான் மஸ்க், "இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகாது. என்னுடைய உடல் அளவு இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு பக்கபலமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ட்விட்டரில் ஜார்ஜெஸ் செயின்ட் பியர் என்ற முன்னாள் UFC சாம்பியன், எலான் மஸ்கை Tag செய்து, "நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். மார்க் ஜுக்கர்பெர்க் உடனான போட்டிக்கு, உங்களுடைய பயிற்சியாளராக நான் இருப்பது என்னுடைய மிகப்பெரிய கௌரவம்" என ட்வீட் போட்டிருந்தார். இந்த ட்வீட்டுக்கு கடந்த திங்களன்று சரி என ஒப்புக்கொண்டு ரீ ட்வீட் செய்திருந்தார்.
மேலும் அவர் Lex Fridman எனும் தற்காப்புக் கலை பயிற்சியாளரிடம் திங்களன்று பயிற்சி மேற்கொண்டதையும் எலான் மஸ்க் கூறினார். இந்த பயிற்சியாளரே மார்க் ஜுக்கர்பெர்க்குக்கும் பயிற்சி அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் பயிற்சியளிப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக Lex Fridman தெரிவித்திருந்தார்.
இரண்டு போட்டியாளர்களுமே UFC தலைவரிடம் பேசியிருந்தாலும் சண்டைக்கான தேதி எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.
"இருவருமே இந்தப் போட்டிக்கு ஆர்வமாக இருக்கிறார்கள். உலக வரலாற்றில் இது மிகப்பெரிய சண்டையாக இருக்கும். இதுவரை நடந்த சண்டைகளில் இதுதான் பெரியது. இதுவரை UFC போட்டிகளுக்கு வரும் பார்வைகள் மூலம் கிடைத்த வருவாயை, இவர்களுடைய போட்டி கட்டாயம் முறியடிக்கும். இந்த போட்டியை ஒருவர் காண்பதற்கு அவருக்கு சண்டையில் ஆர்வம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எல்லா தரப்பு மக்களும் இவர்கள் எப்படி சண்டை போடுகிறார்கள் என்பதைப் பார்க்க விரும்புவார்கள்" என UFC தலைவரும் தெரிவித்திருந்தார்.
இவர்களுக்குள்ளான போட்டி எப்போது நடக்கும் என எல்லா தரப்பு மக்களும் ஆர்வமாகக் காத்துக் கிடக்கின்றனர்.