காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான இ.திருமகன் இன்று திடீரென மரணம் அடைந்தார். 45 வயதாகும் இவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று மதியம் அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட, அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
அதனையடுத்து, அவரது உடல் ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்ததும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். அதைத் தொடர்ந்து அவர் ஈரோட்டுக்குப் அவசரமாகப் புறப்பட்டுச் சென்றார். சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகனின் மரணச் செய்தியை அறிந்ததும் ஏராளமான பொதுமக்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் அதிர்ச்சி அடைந்ததோடு, அவரது வீட்டுக்குத் திரண்டு சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சுமார் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தியதோடு, கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் சுமார் ஒன்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமை இ.திருமகனையே சேரும். இவர் தந்தை பெரியாரின் கொள்ளு பேரனும் ஈ.வி.கே.சம்பத் அவர்களின் பேரனும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இள வயதில் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்து, சட்டசபைக்குச் சென்றதால் அந்தத் தொகுதி மக்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியினரும் பெரும் மகிழ்ச்சியில் இருந்த வேளையில் இவரது இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களிடமும் பெரும் மரியாதையுடன் பார்க்கப்பட்டதாலேயே இவர், பெரும் வாக்கு வித்தியாசத்தில் சென்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை இவர் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். 2014 முதல் 2017ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு தலைவராக இருந்துள்ளார். மேலும், 2016 முதல் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இறுதியாக 2021 முதல் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.