சென்னையில் செட்டிநாடு குழுமத்தில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வெளிநாடுகளில் சட்ட விரோதமாக பணம் முதலீடு செய்தது தொடர்பாக, செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான ஆறு இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அண்ணா சாலை மற்றும் எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் இயங்கி வருகிறது. இந்த இரண்டு அலுவலகங்களிலும் அமலாக்க துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் இருந்து வந்த அமலாக்கதுறையினர் இந்த சோதனை நடத்தி வருகின்றனர்.
செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமாக சிமெண்ட் நிறுவனம், நிலக்கரி நிறுவனம், சர்வதேச ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனம், பள்ளிகள், மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டு மற்றும் 2015ஆம் ஆண்டு செட்டி நாடு குரூப்ஸ் தொடர்பான இடங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு, பல கோடி மதிப்பிலான பணம் மற்றும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
செட்டிநாடு குழுமத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமாக வெளிநாடுகளில் ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. வெளிநாட்டில் சட்டவிரோதமாக 110 கோடி அளவிற்கு சொத்துக்கள் வாங்கப்பட்டதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செட்டிநாடு குழுமம், சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு பண பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் முதலீட்டு பத்திரங்கள் சிக்கி உள்ளன.
வரி ஏய்ப்பு புகாரின் கீழ், 2015, 2020ம் ஆண்டுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள், சென்னை, மும்பை, ஹைதராபாத் என, செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான, 50 இடங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது, 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது; 23 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.