பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அதிபர் ஜோ பைடனை சந்தித்த மேக்ரான், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். குறிப்பாக ரஷ்யா உக்ரைன் போர் நிலவரமானது இரு நாடுகளுக்கும் பிரச்னையாக உள்ளது. எனவே, ஜோ பைடன் - மேக்ரான் ஆலோசனையில் ரஷ்யா போர் தான் முக்கியமான பிரச்சனையாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சு வார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார் ஜோ பைடன் . இந்த போரை நிறுத்த ஒரே சரியான வழி, உக்ரைனில் இருந்து ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெறுவது தான். ஆனால், புதின் அதை செய்வதாக தெரியவில்லை. பிரான்ஸ் மற்றும் சக நேட்டோ நண்பர்களிடம் ஆலோசித்து வருகிறேன். அதன் அடிப்படையில், இந்த போரை நிறுத்த தேவையென்றால், புதினுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராகவுள்ளேன்.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர புதின் நினைத்தால், புதினுடன் அமர்ந்து பேசி,அவர் மனதில் என்ன உள்ளது என்று அறிந்து கொள்ள தயாராக உள்ளேன். ஆனால், புதின் இதற்கு தயாராக உள்ளாரா என்று தெரியவில்லை. உக்ரைனை எளிதில் வென்றுவிடலாம் என்று புதின் தப்புக் கணக்கு போட்டுள்ளார். ஆரம்பத்தில் அவர் போட்ட கணக்கு எல்லாம் தப்புக் கணக்காக மாறிவிட்டது. ரஷ்ய படையெடுப்பை எதிர்கொள்ள உக்ரைனுக்கு அமெரிக்காவும் பிரான்சும் எப்போதும் துணை நிற்கும்" என உறுதி அளித்துள்ளார் ஜோ பைடன்.