அதிகாரம் கிடைத்தால் உண்மையை எவ்வளவு தூரம் மறைக்க முடியும் என்பதை காந்தி குடும்பம் நிரூபித்துள்ளது என்று பா.ஜ.க. தலைவர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
கர்நாடக பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மாளவியா மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி ஸ்மிருதி இரானி காங்கிரஸ் கட்சிக்கு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். ஆட்சிக்கு வந்தால் உண்மைகளை மறைக்கவும் காங்கிரஸ் தயங்காது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல்காந்தி சமீபத்திய அமெரிக்க பயணத்தின்போது இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக முறையிலான அரசை சீர்குலைக்க சந்தேகத்துக்குரிய நபர்கள் மற்றும் கோடீஸ்வர முதலீட்டாளர் ஜார்ஜ் சோரஸ் போன்றோர்களுடன் சேர்ந்து காங்கிரஸ் சதித்திட்டம் தீட்டியதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியது.
மேலும் வட அமெரிக்க வட்டாரத்தில் பிரபலமானவரும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்புடன் தொடப்புடையவருமான தன்ஸீம் அன்ஸாரியுடன் சேர்ந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ததாகவும் ராகுல்காந்தி மீது அவர் குற்றஞ்சாட்டினார்.
வடஅமெரிக்க இஸ்லாமிய வட்டாரங்களுக்கு ஜாமாத் இ இஸ்லாமியுடன் தொடர்பு உள்ளதும், அவர்கள் தெற்காசியாவில் செயல்பட்டு வரும் குழுக்களுடன் சேர்ந்து கொண்டு இந்திய ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவது குறித்தும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தீர்மானம் கவலை வெளியிட்டிருந்ததாகவும் இரானி சுட்டிக்காட்டினார்.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகத்தில் மாளவியாவுக்கு எதிராக எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக பா.ஜ.க. எடுத்த நிலைப்பாட்டின் விளைவுதான் இது என்றும் குறிப்பிட்டார்.
காந்தி குடும்பம் உண்மையை எவ்வளவு தூரம் மறைக்க முடியும் என்பதற்கு ஆதாரத்தை அளித்துள்ளனர் என்று குறிப்பிட்ட இரானி, அமெரிக்க பயணத்தின் போது சுனிதா விஸ்வநாத்தை சந்தித்தது பற்றிய கேள்விக்கு ராகுல் பதில் அளிக்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரேஸ் சார்பில் நிதி அளித்தவர் களுடனும் ராகுல் தொடர்பு வைத்திருந்தார். கர்நாடகத்தில் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு நிதியுதவி அளித்த சர்வதேச அறக்கட்டளையின் நிர்வாகிகளும் இந்த யாத்திரையில் ராகுலுடன் பங்கேற்றுள்ளனர் என்றும் இரானி குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கேலி செய்யும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் அவரது படத்தை வெளியிட்டு, கட்சிக்குள் மோதலை உருவாக்க முயன்றதாக பா.ஜ.க.வின் மாளவியா மீது கர்நாடக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரமேஷ்பாபு கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.