தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கடந்த இரண்டு நாட்களாக செயல்படாமல் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்குக் காரணம் – அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மென்பொருள் சேவையைப் பராமரித்து வரும் தனியார் நிறுவனம் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்ததுதான்! இதற்காக அந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் தமிழக அரசு கேபிள் டிவி மூலமாக பொதுமக்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வாங்குவது தொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜன் என்பவரது நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில் ஒப்பந்தத்தின் படி செய்ய வேண்டிய வேலைகளை ராஜனின் நிறுவனம் காலதாமதம் செய்ததால், அரசு தரப்பிலிருந்து நிலுவைத் தொகை தரப்படாமல் நிறுத்தி வைக்கப் பட்டது. .
இதையடுத்து அந்த தனியார் நிறுவன இயக்குனர் ராஜன், தன் கட்டுப்பாட்டில் செயல்படும் 21 லட்சம் தமிழக அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்களின் செட்டாப் பாக்ஸை செயல்படாமல் நிறுத்தி வைத்தார். இதையடுத்து ராஜன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் தமிழக அரசு கேபிள் டிவி நிர்வாகம் புகார் அளித்தது.
அதன் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் ராஜன் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.