செய்திகள்

குஜராத் மோர்பி பாலம் விபத்து: உயிரிந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஜெ.ராகவன்

குஜராத் மாநிலம், மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து மோர்பி நகர காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. பாலத்தை சீரமைக்கும் ஒப்பந்தத்தை ரூ.2 கோடிக்குப் பெற்ற ஒரேவா குழுமம், சீரமைப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

ஒரேவா குழுமம், அஜந்தா என்ற பிராண்ட் பெயரில் சுவர் கடிகாரங்களை தயாரித்து வருகிறது. அந்த நிறுவனத்துக்கு மச்சூரு நதியின் குறுக்கே பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்ட கேபிள் பாலத்தை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி, அதாவது பாலம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட நான்காவது நாள் கேபிள்கள் அறுந்து விழுந்ததில் பாலம் இடிந்தது. இந்த சம்பவத்தில் 135 பேர் பலியானார்கள். பாலம் இடிந்த சமயத்தில் அதில் 300-க்கு மேலானவர்கள் சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பாலம் புதுப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், கேபிள்கள் துருப்பிடித்தும், பக்கவாட்டில் உள்ள வலைபின்னல் சுவர்களின் இணைப்புகளில் இருந்த ஆணிகள் உடைந்தும், காணப்பட்டன. பாலத்தின் தாங்கு சக்தி என்ன என்பது பற்றி நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்தப்படவில்லை என்று தடயவியல் சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தலைமறைவான இருந்த ஒரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் படேல் கடந்த ஜனவரி 31ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சோனியா கோகானி, நீதிபதி சந்தீப் பட் அடங்கிய அமர்வு, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் 4 வார காலத்திற்குள் ஒரேவா குழுமம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதால் இவ்வளவு நன்மைகளா? 

SCROLL FOR NEXT