ஈரோடு கிழக்கு தொகுதியில் 4 முனை போட்டி இறுதியாகி உள்ளது. தேர்தல் களம் அனல் பறக்கும் பிரச்சாரங்களினால் சூடுபிடித்துள்ளது.
பாஜக பிரச்சாரம் செய்வதை எடப்பாடியார் விரும்பவில்லை என்று கட்சி வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால் சிறுபான்மையினர் ஓட்டு நழுவி விடும் என்று எடப்பாடியார் நினைக்கிறார். அதனால்தான் பாஜக முக்கியத் தலைவர்களை பிரச்சாரத்துக்கு அழைக்காமல் அவர்களை தவிர்த்து வருகிறார்.
சிறுபான்மையினர் ஓட்டை குறிவைத்து தான் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அதிமுகவைத் சேர்ந்த இஸ்லாமியரை ஈரோட்டுக்கு வரவழைத்து அவர்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து பிரச்சாரம் செய்ய வைக்கிறார்.
எடப்பாடியாரும் பிரச்சாரத்தின்போது எங்களுக்கு பாஜக உடன் கூட்டணியில் இருப்பதால் அவர்கள் சொல்வதைதான் நாங்கள் செய்வோம் என்று எதிர்கட்சியினர் பொய் பிரச்சாரங்கள் செய்து வருகிறார்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு, இரண்டையும் போட்டுக் குழப்பிக்க வேண்டாம். அதிமுக எப்போதும் சிறுபான்மையினர் பக்கம் தான் நிற்கும், இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று தெளிவாக பேசியிருந்தார்.
இந்த சூழலில்தான், வாசனின் பேச்சு அதிமுகவுக்கு அதிர்ச்சியை தந்துவிட்டதாம்..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசை ஆதரித்து, பிபெ அக்ரஹாரம் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசும்போது, "இந்த தேர்தலை யாருமே எதிர்பார்க்கவில்லை... எதிர்பாராதவிதமான தேர்தல் ஆகும்.. சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டு அதிமுக கூட்டணி தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், மடிக்கணினி, அம்மா கிளினிக் போன்ற திட்டங்ளை முடக்கி, ஏழையின் வயிற்றில் திமுக அடிக்கிறது.
கொரோனாவில் இருந்து மீண்டு வரும் மக்கள் மீது, வீட்டுவரி, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு என மும்முனை தாக்குதல் நடத்தியுள்ளனர். மகளிருக்கான உரிமைத்தொகை, சமையல் எரிவாயு மானியம், கல்விக்கடன் போன்ற வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளனர். இந்தியாவின் பொருளாதார உயர்விலே இஸ்லாமியர்கள் பங்கு மிகப்பெரியது.
அத்தகைய இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக அரணாக இருந்து வருகிறது. அவர்களுக்கு பாதிப்பு என்றால், அதிமுகவும், தமாகாவும் உடனே குரல் கொடுத்து வருகிறோம். “இஸ்லாமியர்களின் உயர்வு நாட்டின் உயர்வு” என்று கருதுகிறோம். இஸ்லாமியர்களுக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் நாம் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும். இந்த தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களை அவமதிக்கத் தொடங்கிவிட்டன. ஏழை மக்களுக்கு அழுத்தம் கொடுத்து, ஏமாளியாக்கி பட்டியில் பூட்டி வைத்து தரக்குறைவாக நடத்து கின்றனர்.
இது ஜனநாயகம் அல்ல; பணநாயகம். இங்கு அநியாயத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் தர்மம் ஜெயிக்க வேண்டுமா; அதர்மம் ஜெயிக்க வேண்டுமா என மக்கள் முடிவு எடுக்க வேண்டும், என்றார்.
இஸ்லாமியர் இந்தியாவின் பொருளாதார உயர்விலே இஸ்லாமியர்கள் பங்கு மிகப்பெரியது... இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என்றால் குரல் கொடுக்கக்கூடிய அரசு அதிமுக அல்ல. இஸ்லாமியர்களுக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் நாம் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும்" என்றார்.. அதிமுகவை பற்றி இப்படி பேசியதுமே, பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், சிவி சண்முகம் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்... பிறகு, டக்கென சுதாரித்து கொண்ட ஜிகே வாசன், உடனடியாக அடுத்த வார்த்தையிலேயே, "குரல் கொடுப்பது அதிமுகவும், தமாகாவும்தான்" என்றாராம்.
ஜிகே வாசனின் இந்த பிரச்சார பேச்சுக்கள் இணையத்தில் வீடியோவாக ஷேர் ஆகிக் கொண்டிருக்கின்றன.