நிதிஷ் குமார் 
செய்திகள்

நிதிஷ் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டது ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா!

ஜெ.ராகவன்

பிகாரில் நிதிஷ்குமார் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டது முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சி. ஆதரவை வாபஸ் பெற்றதற்கான கடிதத்தை மாநில ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகரிடம் நேரில் கொடுத்ததாக மஞ்சி மற்றும் அவரது மகன் சந்தோஷ் சுமன் இருவரும் தெரிவித்தனர்.

அடுத்த சில நாட்களில் தில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் சந்தோஷ் சுமன் தெரிவித்தார்.

மஞ்சி மற்றும் சந்தோஷ் சுமன், மாநில ஆளுநரை சந்தித்தபோது நூற்றுக்கணக்கான கட்சியின் ஆதரவாளர்கள் வெளியில் நின்று கொண்டு நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இணைந்துவிடுமாறு நிதிஷ்குமார் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக அமைச்சரவையிலிருந்து ராஜிநாமாச் செய்வதாக கடந்தவாரம் சந்தோஷ் சுமன் தெரிவித்திருந்தார். அவர் சட்டமேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.யாக) இருந்து வந்தார்.

பிகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான மகா கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மற்றும் 3 இடதுசாரி கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 243 உறுப்பினர்களில் 160 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கூட்டணிக்கு உள்ளது. ஆட்சியமைக்க தேவையான பலம் 122 தான்.

ஆளுநரை சந்தித்துவிட்டு வந்தபின் ஜிதன்ராம் மஞ்சி செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த சில நாட்களில் நானும், சந்தோஷ் சுமன் இருவரும் தில்லி செல்லவிருக்கிறோம். தில்லியில் மருத்துவ ஆலோசனை பெற விரும்புகிறேன். மேலும் அரசியல் தலைவர்களையும் நாங்கள் சந்திக்க இருக்கிறோம். அப்போது கட்சியின் எதிர்காலம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

முன்னாள் முதல்வரான ஜிதன்ராம் மஞ்சி, கடந்த ஏப்ரல் மாதம் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசினார். அப்போதே ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா பா.ஜ.க. கூட்டணியில் சேரலாம் என வதந்திகள் உலா வந்தன.

இந்த நிலையில் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் கட்சி சார்பில் முடிவுகள் எடுக்க சந்தோஷ் சுமனுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மஞ்சி தெரிவித்தார்.

இதனிடையே ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சாவை தங்கள் கட்சியுடன் இணைத்துவிடுமாறு நிர்பந்தித்தது உண்மைதான் என்பதை ஐக்கிய ஜனதாதளம் ஒப்புக் கொண்டுள்ளது.

இதனிடையே பா.ஜ.க.வுக்காக ஜிதன்ராம் மஞ்சி, மகா கூட்டணி தலைவர்களை உளவுபார்க்கும் வேலையில் ஈடுபட்டதாக நிதிஷ்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். இதன் காரணமாகவே 23 ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்துக்கு ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தியை சந்திக்கும் திட்டம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கும் வாய்ப்பு இருக்கிறது, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும் சந்திக்கும் திட்டமும் உள்ளது என்றும் மஞ்சி கூறினார்.

2014 –ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தோல்விக்கு தார்மிக பொறுப்பேற்று நிதிஷ்குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது சிறிது காலம் ஜிதன்ராம் மஞ்சி முதல்வராக இருந்தார். அவரது 8 மாத கால ஆட்சி பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து அவர் பதவி விலகினார். பின்னர் ஐக்கிய ஜனதாதளத்திலிருந்து விலகி ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா என்னும் புதிய கட்சியை தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அணி மாறுவதை வழக்கமாக கொண்டிருக்கும் மஞ்சியின் கட்சி, இதுவரை தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெறவில்லை.

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

SCROLL FOR NEXT