தமிழகத்தில் வீட்டுமனை வரன்முறை சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழாவில் நேற்று கலந்துகொண்டு அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது;
தமிழகத்தில் நிறைய கட்டிடங்கள் அனுமதி இல்லாமல் கட்டப் பட்டுள்ளன. அவற்றை வரைமுறை செய்வதில் சிக்கல்கள் உள்ளன. சட்டத்துக்கு உட்பட்டு கட்டப்படாத கட்டிடங்கள் இடிக்கப் படும். எனவே, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.
மேலும் வீட்டுமனை வரன்முறை சட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து இந்த கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். மற்ற கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
-இவ்வாறு அமைச்சர் பேசினார். இந்த விழாவில், வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, சிஎம்டிஏ அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.