விண்வெளியானது மனித உடலுக்கு ஏற்ற இடமாக இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால் அங்கே பூமியைப் போல புவியீர்ப்பு விசை இருப்பதில்லை. இது மனிதனின் தலை முதல் கால் வரை பிரச்சினைகளை ஏற்படுத்தும் காரணியாக இருக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்ய நிதியை ஒதுக்கிய நாசா, விண்வெளியில் மனிதர்களுக்கு ஏற்படும் சிக்கல் பற்றிய ஆழமான புரிதலை அறிய முயற்சித்தது. இந்த ஆராய்ச்சியில் சர்வதேச விண்வெளி நிலையம் அல்லது நாசா விண்வெளி விண்கலங்களில் குறைந்தது ஆறு மாதம் பயணித்த விண்வெளி வீரர்களின் மூலையில் நடுப்பகுதியிலுள்ள செரிப்ரோஸ்பைனல் திரவம் கொண்ட பெருமூளை, குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த நிறமற்ற, நீர் நிறைந்த திரவமானது மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் பாய்கிறது. இந்த திரவம்தான் மூளையை திடீர் தாக்குதலிலிருந்து பாதுகாத்து மூளையிலுள்ள கழிவுப் பொருட்களை நீக்குகிறது. இந்த ஆராய்ச்சியில் மொத்தம் 30 விண்வெளி வீரர்களின் மூலை ஸ்கேன் செய்யப்பட்டு இது போன்ற பயணங்களுக்குப் பிறகு அவர்களின் பெருமூளையின் விரிவாக்கம் முழுமையாக குணமடைய மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஒருவேளை இந்த மூளையின் விரிவாக்கம் குணமடைய போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றால், குறைந்த கிராவிட்டியில் திரவ மாற்றங்களை சமாளிக்கும் மூளையின் திறனை இது பாதிக்கலாம். அதாவது சராசரி அளவிலிருந்து பெருமூளை விரிவடைவதால், மூளைக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் திரவம் பயணிக்க குறைந்த இடமே இருக்கும் என ப்ளோரிடா பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானி ஹீதர் கூறியுள்ளார்.
விண்வெளிக்கு செல்பவர்களுக்கு மூளை விரிவாக்கத்தின் தாக்கம் உடனடியாகத் தெரிவதில்லை. இதனால் மூளை விரிவடைந்து சுற்றியுள்ள திசுக்களை அழுத்தி பிரச்சனையை ஏற்படுத்தலாம் என கண்டறிந்துள்ளனர். விண்வெளியில் பூமியைப் போல புவியீர்ப்பு விசை இல்லாததால் இது மூளையை மாற்றியமைக்கிறது.
இந்த ஆய்வில் மொத்தம் 23 ஆண் மற்றும் 7 பெண் விண்வெளி வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அமெரிக்கா, கனடா ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்களிலிருந்து சுமார் 47 சராசரி வயதுடைய நபர்களே தேர்வு செய்யப்பட்டனர். இதில் 8 பேர் சுமார் இரண்டு ஆண்டுகள் வரை விண்வெளி விண்கலத்தில் பயணம் செய்தவர்கள். 18 பேர் ஆறு மாதங்களும் மற்றும் 4 பேர் ஒரு வருடம் வரை ISS பணிகளில் இருந்தவர்கள்.
இதில் குறுகிய காலம் பயணித்தவர்களுக்கு மூளையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் விண்வெளியில் இருந்த வீரர்களுக்கு, இந்த மூளை விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு வருடம் விண்வெளியில் இருந்தவர் களோடு ஒப்பிடும்போது, ஆறு மாதத்திற்கு இருந்தவர்களிடம் பாதிப்பு குறைவாகவே இருந்தது.
மேலும் இந்த மைக்ரோ கிராவிட்டி நிலைமைகள் மனித உடலின் சுமையைக் குறைப்பதால், மற்ற பல உடலியல் விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. எலும்பு மற்றும் தசைச்சிதைவு, இருதயம் மாற்றங்கள், உள் காதில் சமநிலை அமைப்பில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் இதனால் ஏற்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து விண்வெளிக்கு பயணிக்கும்போது எதிர்கொள்ளும் அதிகமான சூரியக் கதிர்வீச்சு வெளிப்பாட்டினால், புற்றுநோய் அபாயம் உயர்வது மற்றொரு கவலையளிக்கும் விஷயமாகும்.