D.K.Sivakumar 
செய்திகள்

என் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டு விலகத் தயார்: கர்நாடக துணை முதல்வர்!

ஜெ.ராகவன்

‘அரசு ஒப்பந்ததாரர்களிடமிருந்து நான் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டு விலகத் தயார்’ என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பிருஹத் பெங்களூரு மாநகர பாலிகே ஒப்பந்ததாரர்கள் சிலர் நிலுவைப் பணத்தை அரசு விடுவிக்கவில்லை என்று கூறி வருகின்றனர். தற்போதுள்ள காங்கிரஸ் அரசு, நிலுவையில் உள்ள தொகையை விடுவிப்பதற்கு 15 சதவீதம் கமிஷன் கேட்பதாக சில ஒப்பந்ததாரர்கள் கூறி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், ‘முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மூத்த எம்எல்ஏ ஆர்.அசோகா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒப்பந்ததாரர்களுக்கு அரசு பணம் கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது குறித்துப் பேசி வருகின்றனர். இவர்கள் ஆட்சியில் இருந்தபோதே அதை கொடுத்திருக்க வேண்டியதுதானே? அதை ஏன் அவர்கள் கொடுக்கவில்லை. அப்போது ஆட்சியிலிருந்தது யார்? அவர்களை தடுத்தது யார்? அவர்களிடம் பணம் இல்லையா? இல்லை பணிகள் சரிவர செய்யப்படவில்லையா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பாஜக தலைவர்கள் பதில் அளிக்க வேண்டும். அதன் பிறகு நான் ஒப்பந்ததாரர்களுக்கு பதில் கூறுகிறேன்’ என்றார் சிவகுமார்.

மேலும், ‘நான் நிலுவை பாக்கியைத் தர யாரிடமாவது கமிஷன் கேட்டதாக நிரூபித்தால் அரசியலிலிருந்து ஓய்வு பெறத் தயார். ஆனால், முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் ஆர்.அசோகாவுக்கு எதிரான புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் அரசியலிலிருந்து விலகத் தயாரா?’ என்றும் சிவகுமார் கேள்வி எழுப்பினார்.

‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் கெம்பண்ணா தெரிவித்த புகார் குறித்து விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். எனவே, ஒப்பந்தப் பணிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆகவே, இந்த விசாரணை முடிந்த பிறகுதான் ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைப் பணம் வழங்கப்படும். அதுவரை அவர்கள் காத்திருக்க வேண்டும்’ என்றார் துணை முதல்வர் சிவகுமார்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT