செய்திகள்

80 வது பிறந்தநாள் கொண்டாடும் இளையராஜா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து !

கல்கி டெஸ்க்

இசைஞானி இளையராஜாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து தனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இன்று தனது 80 வது பிறந்தநாள் கொண்டாடும் இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள இளையராஜாவின் அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பல்துறையினை சேர்த்த பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்களும் அவரை நேரில் சந்தித்தும் , ட்விட்டரிலும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.

’இசைஞானி’ என்று போற்றப்படும் இளையராஜா 1976 ஆம் ஆண்டு வெளியான ’அன்னக்கிளி’ படத்தில் இசையமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்து இன்று வரை தனது இசை சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தி வருகிறார் ராஜா. 1970களில் தமிழ் சினிமாவை தனது இசையால் புரட்டி போட்டவர் இளையராஜா.

இளையராஜா, இதுவரை 1000-க்கும் மேற்பட்ட இந்திய மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். சிம்பொனி இசைக்குழுவினர் அவருக்கு மேஸ்ட்ரோ என்ற பட்டத்தையும், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் இசைஞானி பட்டமும் வழங்கப்பட்டது.தமிழ் திரைப்பட இசையை பலர் திரும்பி பார்க்க வைத்த ராக தேவன் நம் இசைஞானி.

இசையுலகின் முடிசூடா மன்னரான இளையராஜா சமீபத்திய படங்களில் கூட ஹிட் பாடல்களை தந்து ரசிகர்களுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சியினை அளித்து வருகிறார்.சமீபத்தில் வெளியான 'வழி நெடுக காட்டுமல்லி" பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி உள்ளது.

இசை உலகின் பேரரசனாக வலம் வரும் இளையராஜா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நடிகர் கலம்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT