ஆண் பெண் பாலின பிறப்பு விகிதத்தில் தற்போது முன்னேற்றம் அடைந்திருப்பதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி நாடாளுமன்றத்தில் எடுத்த பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
ஆண் பெண் பிறப்பு வீதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில், ஆண் பெண் பிறப்பு வீதத்தில் கடந்த காலங்களை ஒப்பிடும்போது தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். 1871 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 2021 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி கொரோனா பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டது. தற்போது அந்த பணி நடைபெற்று வருகிறது. 2024 தேர்தலுக்கு பிறகு முழுமையான தகவல்கள் கிடைக்கும்.
குறிப்பாக 1961 ஆம் ஆண்டு 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் என்ற நிலை இருந்தது. பிறகு 2011 ஆம் ஆண்டு 1000 ஆண்களுக்கு 914 என்று குறைந்தது. 2014 - 18 களில் 1000 ஆண்களுக்கு 918 என்று மாறியது. அதன் பிறகு ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் என்ற வீதம் உயர்ந்துள்ளது.
மேலும் 2011 ஆண்டு கணக்கின்படி 100 பெண் குழந்தைகள் பிறக்கும் காலத்தில் 111 ஆண் குழந்தைகள் பிறந்தன. 2022 ஆம் ஆண்டு கணக்கின்படி அது 108 ஆக குறைந்துள்ளது. இவ்வாறு ஆண் பெண் பாலின பிறப்பு விகிதம் சிறிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது.
முன்பு பெண் குழந்தைகளை வெறுத்த காலமாக இருந்தது. பெண் குழந்தைகளை கருவில் அழிக்கும் நிலைகள் ஏற்பட்டன. அதன் பிறகு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டது. மேலும் கல்வி அறிவு, நகர்புற வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டது. தற்போது பாமர மற்றும் கிராமப்புற மக்கள் கூட பெண் குழந்தைகளை விரும்புகின்றனர். மேலும் நாடு முழுவதும் தற்போது குடும்ப கட்டுப்பாட்டு முறை பற்றிய தெளிவு மக்களிடம் நிலவுகிறது என்று தெரிவித்துள்ளார்.