கேரள மாநிலம், பாஜக இளைஞர் பாசறை சார்பில் கொச்சியில் நடைபெற்ற மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். கேரள கலாசாரப்படி உடை அணிந்து வந்த பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகத்துடன் வரவேற்பு கொடுத்தனர்.
இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ’’கேரளாவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஒன்று சேர்ந்திருப்பது வரவேற்புக்கு உரியது. பாஜகவும் இளைஞர்களும் ஒரே காட்சியைத்தான் பகிர்ந்து வருகிறார்கள். அதனால்தான் மத்திய அரசும் இளைஞர்களை முன்நிறுத்தியே அனைத்திலும் செயல்பட்டு வருகின்றது. கேரளாவில் மீனவர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இளைஞர்களிடம் கருத்துக்களைக் கேட்டு, அதன்படிதான் மத்திய அரசு அனைத்திலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால்தான் 13 மொழிகளில் தேர்வுகளை எழுத நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்.
மத்திய அரசு, இளைஞர்களின் தொழில் முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், கேரள அரசு இதுபோன்ற எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. இதை கேரள மாநில இளைஞர்கள் உணர்ந்து வருகிறார்கள். இந்த நூற்றாண்டு இந்தியாவுக்குச் சொந்தமானது. உலகளவில் இந்தியாவின் இளைஞர் சக்தி மிகப் பெரியது. இதன் மூலம் இந்தியா உலகையே மாற்றும்.
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு. நாட்டின் புதியப் பணியை நிறைவேற்ற கேரள இளைஞர்களும் முன்வருகிறார்கள். கேரளாவில் உள்ள பாரம்பரியமான மருத்துவத்தை வெளி உலகுக்குக் கொண்டுவர மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. கோவா போன்ற மாநிலங்களைப் போல, கேரளாவில் மாற்றம் வரும். விரைவில் பாஜக கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும். சூடான் உள்நாட்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான ஆபரேஷன் காவேரியை மத்திய அரசு மேற்கொள்ளும். அதனை மத்திய அமைச்சர் வி.முரளீதரன் முன்னின்று நடத்திக் கொடுப்பார்” என்று கூறினார்.