தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மூன்று நாள் ஊட்டி பயணமாக இன்று கோயம்புத்தூர் புறப்பட்டுச் சென்று இருக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி வருகையை முன்னிட்டு ஊட்டியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், ஆளுநர் தங்கும் இடத்திலும் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தொடர்ந்து மூன்று நாட்கள் ஊட்டியில் தங்கும் ஆளுநர், அங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டு இருக்கிறார். முன்னதாக இன்று காலை சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' திட்டத்தின் கீழ் கலாச்சார பரிமாற்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு நிகழ்வாக பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். இதில், மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அளித்தார்.
அப்போது ஒரு மாணவர், ‘வாழ்வில் வெற்றி வந்து சேரும் நேரத்தில் அது எதிர்பாராதவிதமாக தோல்வியில் முடிந்தால் அதில் இருந்து மீண்டு எப்படி முன்னேறுவது?‘ எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஆளுநர்ஆர்.என்.ரவி, ‘வாழ்வில் தோல்வி என எதுவுமே இல்லை. அது வெறும் சறுக்கல் மட்டுமே. சறுக்கல் அடையாத நபர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். நான் இளம் வயதில் திருமணம் செய்து கொண்டேன். எனது திருமணம் குழந்தை திருமணம். திருமணத்தின்போது எனது மனைவி சிறுமியாக இருந்தார். எனது மனைவி கல்லூரிக்குச் செல்லவில்லை. ஆனால், எனக்கு மிகுந்த பக்கபலமாக இருந்தார். நான் உலகத்தையே எதிர்க்கும் திறனை அவர் எனக்கு அளித்தார். அதுபோல, குடும்பத்தினர் நம் பக்கம் இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும்’ என்று கூறினார்.