அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தனது பங்களாவில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிவித்தது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– இதுகுறித்து டிரம்ப் கூறியதாவது;
அமெரிக்காவின் தெற்கு ஃப்ளோரிடாவில் உள்ள எனது கடற்கரை பங்களாவில் அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் கூறியுள்ளார். வருகிற 2024-ம் ஆண்டு நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பாத தீவிர டெமாக்ரேட் கட்சியினர் இப்படி முறைகேடாக செயல்பட்டுள்ளனர்.
– இவ்வாறு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவி முடிந்து கிளம்பும்போது வெள்ளை மாளிகையில் இருந்து ஃபுளோரிடாவில் உள்ள தனது ஆடம்பர இல்லத்திற்கு சில ஆவணங்கள் அடங்கிய பெட்டிகளை கொண்டு சென்றதாகவும், அதன் காரணமாகவே இந்த சோதனை நடைபெற்றிருக்க கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் டிரம்ப்பின் பங்களாவில் சோதனை நடத்தப்பட்டது குறித்து எப்.பி.ஐ தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. டிரம்ப்பின் இந்த குற்றச்சாட்டு அமெரிக்காவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.