ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவியை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள நிலையில், ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வர் முறைகேடாக கடந்த ஆண்டு தனது பெயரில் சுரங்க ஒதுக்கீடு உரிமத்தைப் பெற்றதாகக் கூறி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்தது. அதனடிப்படையில் விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவியை தகுதிநீக்கம் செய்யும்படி மாநில ஆளுநருக்கு பரிந்துரைத்தது.
இந்நிலையில் அம்மாநிலம் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் இல்லத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.
அதன்பிறகு அனைத்து எம்.எல்.ஏக்களும் ராஞ்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குந்தி பகுதிக்கு இரண்டு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
குதிரை பேரத்தை தடுப்பதற்காக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் மேற்குவங்கம் அல்லது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.