உலகத்தில் எதுவுமே நிரந்தரமில்லை என்கிறபோது, வெற்றி மட்டும் எப்படி நிரந்தரமாக முடியும்? வெற்றியும் மதுவைப் போல் ஒரு குறுகிய நேரத்திற்கான போதை. போதை தெளிந்தபின் மறுபடியும் நிஜத்தை சந்திக்க வேண்டும்.
காலையில் விசில் அடித்து ரோல் கால் தொடங்கியது. கேம்பில் அதிகாரிகள் பரபரப்பாக நின்று கொண்டிருந்தார்கள். நேற்று இரவு மணிவர்மன் கொடுத்த கவரைப் பிரித்து டெபுடி கமாண்டன்ட் சுனில் பர்மார் எல்லோர் முன்னிலையிலும் படிக்கத் தொடங்கினார்.
பிடிபட்ட 55 பேர், பிணமான 37 பேர் எதிலும் அந்த புரட்சிக்குழுவின் தலைவர்கள் இல்லை. அவர்களின் முக்கியத் தலைவன் ராணா உட்பட 10 பேரும் தப்பி விட்டார்கள். அவர்கள் திரும்பவும் படை திரட்டி தாக்கக்கூடும். அதனால் உடனடியாக நமது பட்டாலியனை இங்கிருந்து திரும்பப் பெற முடியாது.
எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். உடனடியாகக் காட்டுப் பகுதியில் எப்போதும்போல் ரோந்து பணியை, தேடுதல் வேட்டையை ஆரம்பிக்க வேண்டும் என உளவுத் துறையின் தகவலை மேற்கோள் காட்டி தலைமையத்தில் இருந்து வந்த உத்தரவை சொல்லச் சொல்ல, எல்லோர் முகமும் மனமும் வாடி நின்றது.
‘மறுபடியும் முதலில் இருந்தா?’ என்று அனைவரும் புலம்பத் தொடங்கினார்கள். இதில் சின்ன ஆறுதல் என்னவென்றால் இங்கிருந்தபடியே 15 பேர் வீதம் அணி அணியாய் விடுப்பில் போகலாம் என்ற உத்தரவுதான். அதுவும் அந்த 60 கிலோ மீட்டர் காட்டுவழி மண் பாதையை ரொம்ப பாதுகாப்போடு கடந்து போக வேண்டிய ஏகப்பட்ட கண்ணிவெடி நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்றித்தான் போக வேண்டும் என்ற கண்டிஷன்.
அதன்படி விடுப்பில் போவதற்கான பட்டியல் தயாரிப்பு பணி ஆரம்பமானது. யார் யாருக்கெல்லாம் அவசரம், அத்தியாவசியமோ அவர்கள் முதலில் போகலாம் என்ற முடிவின்படி முதல் 15 பேரில் குழந்தை இல்லாமல் போராடும் சிவநேசனுக்கும், ஒரு குழந்தைக்காகப் போராடும் இஸ்மாயிலுக்கும் இரண்டு மாதம் விடுப்பில் போக வாய்ப்பு கிடைத்தது.
டோப்பு மேஜருக்கு மனைவி இல்லை. நோய்வாய்ப்பட்டு இறந்து 10 வருடமாகி விட்டது. மறுமணம் செய்துகொள்ளவில்லை. யாரிடமும் பெரிதாய் பேசுவதுமில்லை, சிரிப்பதுமில்லை. மதுவும், மாதுவும் புழங்கும் இந்தப் பட்டாளத்து உலகத்தில் இவர் ஒரு யோகி போல் வாழ்கிறார். இவர் பேசுவது இஸ்மாயில், சிவநேசன், கிஷன் மூவரிடம் மட்டும்தான். அதுவும் ஓரிரு வார்த்தை.
டோப்புவின் மகள் அவரது வயதான அம்மாவின் பராமரிப்பில் ராஞ்சியில் இருக்கிறாள். இப்போதுதான் டிகிரி முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்க விரும்புகிறாள். டோப்பு அவளுக்குக் கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறார். ராஞ்சியில் அவர்கள் சமூகத்தில் படித்த அரசு வேலை செய்யும் மாப்பிள்ளைக்கு நிறைய வரதட்சணை கொடுக்க வேண்டும். அதற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறார். ரொம்ப சிக்கனமாக இருந்து காசு சேர்ப்பதால் அவரை கஞ்சன் டோப்பு என்று எல்லோரும் இங்கே கேலி செய்கிறார்கள்.
இஸ்மாயிலும் சிவநேசனும் விடுப்பில் போகும்போது அவர்களுடைய அலுவலக வேலைகளை கிஷன் சிங்க்கிற்கும், மணிவர்மனுக்கும் கொடுத்துவிட்டுப் போய் விட்டார்கள்.
கிஷனுக்கு 2 வருடம் சர்வீஸ், மணிக்கு அதுவுமில்லை. இருவருக்கும் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது. தப்பு தப்பாய் டூட்டி போட்டு இருக்கிற சீனியர் அனைவரும் அடிக்கப் பாய்கிறார்கள். மணிக்கு பாஷையும் புரியவில்லை. நல்லவேளை, வினய் யாதவ் விடுப்பில் போய்விட்டான். இல்லையெனில் இடுப்பை உடைத்திருப்பான்.