சிறுகதை - பறக்கும் ஆசைகள்!

Tamil Short Story!
Short Story Image
Published on

-திவ்யா

மினுக் மினுக்கென்று பச்சையும் சிவப்புமாய் விளக்குகள் மின்னப் பறந்துகொண்டிருந்த அந்த விமானத்தையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தாள் சாந்த்னி.

"நல்லாத்தான் பேர் வெச்சிருக்காங்கப்பா உனக்கு சாந்தினின்னு... எப்பப் பார் வானத்தையே பார்த்துக்கிட்டிரு... யாராவது ப்ரின்ஸ், சந்திரன்லேர்ந்து பறந்து வந்திட்டிருக்கானான்னு பார்க்கறீங்களாக்கும் மை டியர் ப்ரின்ஸஸ்?"

அவளை உலுக்கிக் கீழே இறக்கி வந்தாள் ராதிகா.

உண்மைதான். அடிக்கடி கற்பனைகளில் தொலைந்து விடுபவள்தான் இந்த சாந்த்னி. அழகாக இருப்பாள்.

தான் அழகு என்ற 'துளி' கர்வமும் அவளிடம் இருந்தது. எனவே தனக்கு வரும் கணவன் 'அப்படி இருக்க வேண்டும்', 'இப்படி இருக்க வேண்டும்' என்று கற்பனைக் கோட்டைகளைக் கட்டுவதும் அதிகமாகவே இருந்தது.

அவளுடைய கற்பனைகள் வார்த்தைகளில் வெளிப்படும்போது பொறுமையுடன் - அதே சமயம் ரசனையுடன் கேட்டுக்கொள்பவள் ராதிகாதான் - அவளின் நெருங்கிய தோழி.

"காஷ்மீர் கீ கலி'ல ஷம்மி கபூர் பாடறாப்போல உன்னைப் பார்த்து டூயட் பாடணுங்கற... ம்?"

அதில் வரும் 'தாரீஃப் கரூம் க்யா உஸ்கி... என்ற பாடலைப் பாட ஆரம்பித்தாள் ராதிகா.

"ச்சீ... கிண்டல் பண்ணாத ராக்கி.. அப்படில்லாம் ஒண்ணும் பாட வேண்டாம்... பழைய ஹிந்திப் பாடல்கள் எனக்குப் பிடிக்கற மாதிரி அவருக்கும் பிடிச்சாப் போதும்."

"நீ வேணாப் பாரு.. ஷம்மி, ஷர்மிலா தாகூரை அந்தப் படத்தில் சுத்தி சுத்தி வந்த மாதிரி, உன்னைச் சுத்தி, சுத்தி வரப் போறான் பாரு உன் ஹஸ்பண்ட்... ஆனா ஒண்ணு... பதினொரு மணி வரைக்கும் 'சாயா கீத்'தும் 'ஆப் கீ ஃபர்மாயிஷ்'ம் கேட்டுட்டுதான் தூங்கப் போவேன்னு வெறுப்பேத்திடாதம்மா... பாவம்!"

“ச்சீ...”

"உங்கம்மா என்னை உதைக்கப் போறாங்க!' பயந்தாள் ராதிகா.

"கவலைப்படாதே... எங்கம்மா அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க."

"அப்ப... இன்னும் கொஞ்சம் ஓட்டலாங்கற... சரி.. உன்னோட 'அவரை'ப் பத்தி இன்னும் என்ன என்ன கற்பனைகள்... சொல்லு."

"ம்... வைரமுத்துவின் வரிகளையும் இளையராஜாவின் இசையையும் ரசிக்கணும்... அப்புறம்... எஸ்.பி.பியை நான் 'என்னமா பாடறான் பாரு, குண்டு கத்திரிக்கா'ன்னு செல்லமா கிள்ளினா... போட்டோலதான்... கோபிச்சுக்க கூடாது."

"வேற ஏதாவது பாக்கி இருக்கா?"

"ம்... ம்... முக்கியமான ஒண்ணு... ம்.. அங்க பார்த்தியா டேக் ஆஃப்?" என்று தொலைவில் ஏர்போர்ட்டிலிருந்து காற்றைக் கிழித்துக்கொண்டு கிளம்பிய ஒரு விமானத்தைக் காட்டிச் சொன்னாள் சாந்த்னி.

"அதை மாதிரி பறக்கணும்... புரியலை? அவருக்கு நல்லா பைக் ஓட்டத் தெரியணும்! நான் அவர் பின்னால உட்கார்ந்துட்டு, தலை முடி பிச்சுக்க... சூப்பர் ஸ்பீடுல பறக்கணும்!" அந்த விமானம் மேலே பறந்து கொண்டிருந்தது.

சாந்த்னியின் அப்பா ஒரு போட்டோவோடு வந்தார்.

"இந்த போட்டோவைப் பாரும்மா சாந்த்னி.. பையன உனக்குப் பிடிச்சிருக்கா சொல்லு... இருபது, இருபத்தஞ்சு ஜாதகம் பார்த்து கடைசில இது ஒண்ணுதான் பொருந்தியிருந்தது.''

நெஞ்சு பட்பட்டென்று அடித்துக்கொள்ள, போட்டோவை வாங்கிப் பார்த்தாள் சாந்த்னி . போட்டோவில் நன்றாகவே இருந்தான் அவன்.

"பையனைப் பத்தி விசாரிச்சேன்... தங்கமான பையனாம்..."

 "........."

"சின்ன வயசிலேருந்தே நல்லா படிப்பானாம்... பேருக்கு பின்னால சி.ஏ., ஐசிடபிள்யூஏ, சிஎஃப்ஏ... இன்னும் நிறைய க்வாலிபிகேஷன்ஸ்... இன்னும் ஏதோ படிச்சிட்டிருக்காராம்... ஹிந்துஸ்தான் லீவரில் ஸீனியர் பொஸிஷன்ல இருக்கார்!"

"........."

"மத்த பசங்க மாதிரி பார்க்லயும் பீச்லயும் சுத்திகிட்டு அலையாம, வாழ்க்கைல முன்னுக்கு வரணுங்கற வெறியோட உழைச்சிருக்கறதாலதான்... கம்பெனிலேயே கார் குடுத்துருக்காங்களாம்... அதுவும் டிரைவரோட... பொண்ணு கண்ணுக்கு லட்சணமா இருக்கணும்னு சொன்னாங்களாம்... வேறே கண்டிஷன்ஸ்லாம் இல்ல... இந்த ஜாதகம் பொருந்தினது நம்ம சாந்த்னியின் அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும்."

சாந்த்னி துவண்டு போனாள் மனதிற்குள்.

ரேடியோகூட கேட்க மாட்டானாமே? இவன் எங்கே முகம்மது ரஃபியையும் இளையராஜாவையும் கேட்டிருக்கப் போறான்..? கார் இருக்காமே கார்... யாருக்கு வேணும்...? பைக்கூட ஓட்டத் தெரியாத பயந்தாங்கொள்ளியா இருப்பான் போலருக்கு... உயிர் வெல்லக் கட்டி!

"ஃபார்மலா பொண்ணு பார்க்கறதெல்லாம் வேணாம், ஒரு ஈவினிங் எங்கயாவது மீட் பண்ணிப் பேசலாம் அப்படீங்கறார். உனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே?"

இதையும் படியுங்கள்:
மனித குலத்தின் மாபெரும் துன்ப நிலை எது? இந்த குட்டிக் கதையை படிச்சு தெரிஞ்சுக்கோங்க!
Tamil Short Story!

''இல்லப்பா'" என்று அவசரமாகச் சொல்லிவிட்டு எழுந்து போனாள். மனசுக்குள் குழப்பமாக இருந்தது.

வளுக்குப் படபடப்பாக இருந்தது. ஐந்தரை ஆக இன்னும் நூற்றிப் பதிமூன்று விநாடிகள் இருக்கின்றன. ஐந்தரைக்குத்தான் அவன் வருவதாகச் சொல்லியிருந்தான். கோயிலில் இன்னும் கூட்டம் வர ஆரம்பிக்கவில்லை. சூடு தேங்கியிருந்த கருங்கல் தரையில் தொடர்ந்து உட்காரச் சிரமமாக இருக்கவே, எழுந்துகொண்டாள்.

"ஸாரி. லேட் ஆக்கிட்டேனா?"

சட்டென்று எதிரே உதித்தவன். பளிச்சென்று துடைத்த சிலை போல கம்பீரமாக இருந்தான்.

"நீங்கதானே சாந்த்னி?"

"உம்."

''ஐ'ம் பிரகாஷ். அதுல பாருங்க, ஒரு படை திரட்டிட்டு வந்து, சந்தைல மாடு பிடிக்கறாப்பல பொண்ணு பார்த்துட்டு, டிபன் தின்னுட்டு, ஒரு அபத்த சஸ்பென்ஸ் வெச்சி, லெட்டர் போடறதா சொல்லி, எழுந்து போற அயோக்கியத்தனத்தை செய்ய எனக்கு விருப்பமில்லை. அதான், உங்க அப்பாகிட்ட, - 'உங்க பொண்ணை எதாவது கோயிலுக்கு கூட்டிட்டு வாங்க,  பார்த்துப் பேசிடறோம், ரெண்டு பேரும். ஒத்துப் போகும்னு தோணிச்சின்னா ஓகே. இல்லைன்னா 'பை' சொல்லிட்டு போயிடலாம்' அப்படீன்னேன்."

அவளுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. அவனே தொடர்ந்தான் :

"அஃப்கோர்ஸ், பத்து நிமிஷமோ, இருபது நிமிஷமோ இப்ப நாம் பேசப் போறதுல பெரிசா ஒண்ணும் அபாரமா புரிஞ்சுக்க முடியாதுதான். ஆனா, அடிப்படை விஷயங்களில் குறைந்தபட்ச ஒற்றுமையாவது இருக்கான்னு பார்த்துடலாம் இல்லியா?"

"உம்."

"உங்களுக்கு ம்யூஸிக் பிடிக்குமா?"

"உம்."

"கர்னாடிக் ஆர் வெஸ்டர்ன்?"

"ரெண்டும். எஸ்.பி.பி.னா உயிர்.”

"அப்படியா? வேறென்ன பிடிக்கும்?"

"மொஹம்மட் ரஃபி, ஆஷா போன்ஸ்லே, வைரமுத்து, இளையராஜா...''

"வாவ்!"

"உங்களுக்குப் பிடிக்குமா?"

“எங்கங்க! உட்கார்ந்து கேக்கணும்னு ஆசைதான். செலக்ட் பண்ணி ரசிக்க விருப்பம்தான். நேரம் ஏதுங்க? உலகத்துல பேய், பூதம், பிசாசு, குட்டிச்சாத்தான் எல்லாம் நிஜமா இருக்கோ இல்லையோ - சி.ஏன்னு ஒரு படிப்பு இருக்கறது நிஜம்! படிப்பு முடியற வரைக்கும் வேற கவனம் இல்லாம இருந்தேன்."

அவளுக்குச் சப்பென்று இருந்தது. அவனே தொடர்ந்தான்,

"அதுல பாருங்க, இந்தக் காலத்துல பெரும்பாலும் கனவுகள்லேயே நாம வாழ்க்கையைக் கரைச்சிடறோம். தரையில கால் பாவாம நடக்கணும்னு விரும்பறோம். சிம்மாசனத்துல உட்கார வெச்சி, ரெண்டு பக்கமும் மயிலிறகால யாராவது விசிறணும்னு ஆசைப்படறோம். தப்பில்லை! ஆனா, அதுக்குக் கஷ்டப்படணும். எனக்கும் ரொம்ப ஆசைங்க! ம்யூஸிக் கத்துக்கணும், கவிதை ரசிக்கணும்... பெயிண்டிங் கத்துக்கணும். வரப் போற மனைவியை அப்படியே மானசீகமா வரைஞ்சி, பிரிண்ட் அவுட் எடுத்து வந்ததும் ஒப்பிட்டுப் பார்க்கணும்... சின்னச் சின்னதா நிறைய ஆசை!

ஆனா இதெல்லாம் எப்ப வேணா சாத்தியம், முதல்ல லைஃப்ல செட்டில் ஆகறது முக்கியம்டா'ன்னு எங்கப்பா சொன்னார். யதார்த்தத்தைப் புரிஞ்சி, ஒத்துக்கறது கொஞ்சம் சிரமம்தான்... நீங்க ‘சிந்துபைரவி’ படம் பார்த்திருக்கீங்களா? டீவில ஒருதரம் எதேச்சையா நான் பார்த்தேன்... அதுல ஒரு இடம்... சிவகுமார், லதாமங்கேஷ்கரோட பாட்டு கேட்டுட்டிருப்பாரு. அந்த ஹீரோயின்... பேர் தெரியலை... மிக்ஸி போடுவாங்க... அவர் கோபத்துல எழுந்து வந்து திட்டுவாரு. அதுக்கு இவங்க 'லதா மங்கேஷ்கரா பருப்புப் பொடி அரைச்சுத் தருவாங்க?'ன்னு கேப்பாங்க பாருங்க, அசந்துட்டேன்! அதாங்க யதார்த்தம்! அந்த சீனுக்கு அப்புறம் நான் படம் பார்க்கலை. எழுந்து படிக்கப் போயிட்டேன். பாலசந்தரா வந்து எனக்காக சி.ஏ. எழுதப் போறாரு?''

பளிச்சென்று சிரித்தான். சாந்தினிக்கும் சிரிப்பு வந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நாட்டு சர்க்கரை கடலை உருண்டை!
Tamil Short Story!

மொட்டை மாடியில் ராதிகா கேட்டாள்.

"என்னடீ, பையன் எப்படி?"

"ப்ச்."

"ரசனை இருக்கா? இளையராஜா பிடிக்குமா மாமா?"

“ப்ச்.”

"எஸ்பிபி?"

"ம்ஹும்!"

"ஷம்மி கபூராட்டம் சுத்தி வர சான்ஸ் இருக்கா?''

"தெரியலை."

''பைக் ஓட்டத் தெரியுமாமா? ரொம்ப முக்கியமாச்சே உனக்கு?"

"தெரியாதுன்னு நினைக்கறேன்."

"அப்ப பூட்டகேஸ்! பிடிக்கலைன்னு சொல்லிட்டு வந்துட்டியா? பாவம்!"

"இல்லை."

"பின்னே?"

"மெட்ராஸ்ல சத்திரம் கிடைக்கறது கஷ்டம்; கல்யாணத்தை எதாவது கோயில்ல வெச்சிக்கலாமான்னு கேட்டேன்."

''அடிப்பாவி, என்னாச்சு உனக்கு?"

"யதார்த்தத்தைப் புரிஞ்சுக்கறது கஷ்டம்னு அவர் சொன்னார். ஆனா எனக்குப் புரிஞ்சிடுச்சி!"

"எனக்குப் புரியலை!"

''புரியலை? லதாமங்கேஷ்கர் பருப்புப்பொடி அரைச்சித் தர மாட்டா."

"என்னது?"

''ஒண்ணுமில்லை!" என்று சிரித்தாள் சாந்த்னி.

ஒரு விமானம் தாழப் பறந்து தரையைத் தொட்டது.

பின்குறிப்பு:-

கல்கி 18 பிப்ரவரி 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com