செய்திகள்

கலைஞர் 100 - திருவள்ளுவர்தான் கலைஞர், கலைஞர்தான் திருவள்ளுவர் - வைகோ புகழாரம்!

ஜெ. ராம்கி

திருவள்ளுவரையும் கலைஞரையும் பிரித்து பார்க்க முடியாது. தமிழ் இருக்கும் வரை திருக்குறள் இருக்கும். திருக்குறள் இருக்கும் வரை கலைஞரின் புகழ் இருக்கும் என்று ம.தி.மு.கவின் நிறுவனர் வைகோ புகழாராம் சூட்டியிருக்கிறார். கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு தி.மு.க கூட்டணிக்கட்சிகள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலைஞருக்கும் திருக்குறளுக்கும் உள்ள தொடர்பை வைகோ நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.

திருக்குறளுக்கும் கலைஞருக்கும் உள்ள தொடர்பு, அவரது 14 வயதிலேயே ஆரம்பமாகிவிட்டது. 1948ல் திருக்குறள் மாநாட்டை முன்னின்று நடத்திய பெரியார், அதே மாநாட்டில் தாளமுத்து நடராஜனின் சிலையை பட்டுக்கோட்டை அழகிரியைக் கொண்டு திறக்க வைத்தார். அந்நிகழ்ச்சிதான் திருக்குறள் மீது கலைஞருக்கு தனிப்பிரியம் உருவாக காரணமாகியது.

பெரியார் திருக்குறள் மாநாடுகளை நடத்தி முடித்த 7 ஆண்டுகளுக்கு பின்னர், 1956ல் தன்னுடைய முரசொலி வார இதழில் முதல் முறையாக குறளோவியம் எழுதினார். அவர் தொடர்ந்து எழுதிய 354 திருக்குறள்களில் கலைஞரின் முதல் உரை அன்றுதான் எழுதப்பட்டது. அடுத்து வந்த பல ஆண்டுகளாக குறளோவியம் தீட்டிய கலைஞர், அந்த குறளோவியத்தை வடிவமைக்க சென்னையில் ஒரு வள்ளுவர் கோட்டத்தையும் அமைத்தார்.

வள்ளுவர் கோட்டத்தை திட்டமிட்டவர், கலைஞர். திருவாரூர் தேரை நினைவூட்டும் வகையில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டது. அடிக்கல் நாட்டிய நாள் முதல் அனைத்து ஏற்பாடுகளையும் அவரே முன்னின்று செய்தார். வள்ளுவர் கோட்டத்தை கட்டி முடித்து, திறப்பு விழா நடத்தும் நாளை எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது.

முரசொலியில் தன்னுடைய வருத்தத்தை வெளிக்காட்டாமல், குறளோவியம் தீட்டப்பட்டது என்று பெருமையோடு வள்ளுவர் கோட்ட திறப்பு விழாவை உடன்பிறப்புகளுடன் பகிர்ந்து கொண்டார். பாசத்தோடு வளர்த்த மகளின் திருமணத்தை பார்த்து மகிழ நினைத்த நேரத்தில் மணப்பந்தலுக்குள் நுழைய முடியாமல் வெளியே நிற்க வேண்டிய சூழலில் இருப்பதாக உருக்கமாக எழுதியிருந்தார்.

வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்ட பின்பும் தினமும் அவ்வழியேதான் முரசொலி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். ஆனால், ஒரு நாளும் வள்ளுவர் கோட்டத்திற்குள் சென்றதில்லை. 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்னர்தான் வள்ளுவர் கோட்டத்தில் அடியெடுத்து வைத்தார். அடுத்து கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் பின்னணியையும் வை.கோ பகிர்ந்து கொண்டார். மூன்று கடல்கள் சந்திக்கும் இடமான குமரி முனையில் வள்ளுவர் சிலை அமைக்கவேண்டும் என்பது கலைஞரின் நீண்டகால கனவு. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர்தான் அது சாத்தியமானது.

குமரிமுனையில் வள்ளுவர் சிலையை அடிக்கல் நாட்டியது, கலைஞர்தான். கையில் உளியெடுத்து அவரே செதுக்கி தொடங்கிவைத்தார். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் 2000ம் ஆண்டின் முதல் நாளில் குமரி முனையில் வள்ளுவர் சிலை கலைஞரின் கைகளால் திறந்து வைக்கப்பட்டது. வள்ளுவர் சிலையை பற்றி கலைஞர் குறிப்பிடும்போது அலையும் வலையும் அசையலாம். நாம் கட்டியுள்ள சிலை அசையாது என்றார். சுனாமி பேரலையின்போதும் வள்ளுவர் சிலை அசையாமல் நின்றது. அவரையும் திருவள்ளுவரையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழ் இருக்கும் வரை திருக்குறள் இருக்கும். திருக்குறள் இருக்கும் வரை கலைஞரின் புகழ் இருக்கும் என்று வை.கோ பேசினார்.

நிதானமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா?

NISAR - இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் பேரிடர் கண்காணிப்பு செயற்கைக்கோள்!

துணிந்தாருக்கு துக்கம் இல்லை!

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

SCROLL FOR NEXT