செய்திகள்

ஹிந்து பெண்களே கைப்பையில் கத்தி வைத்திருங்கள்! - பெண் துறவி பேச்சால் சர்ச்சை!

ஜெ.ராகவன்

வலதுசாரி ஆதரவாளரான சாத்வி பிராசி, ஹிந்து பெண்கள் கைப்பையில் லிப்ஸ்டிக், சீப்புக்கு பதிலாக கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

ஹிந்து பெண்கள் கைப்பையில் கத்தி வைத்திருப்பது தெரிந்தால் ஜிஹாதிகள் சற்று தள்ளியே இருப்பார்கள் என்றும் விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் ரட்லம் என்னுமிடத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ பெண்கள் கைப்பையில் லிப்ஸ்டிக், சீப்பு வைத்துக் கொள்வதற்கு பதிலாக கத்தியை வைத்துக் கொண்டால் ஹிஹாதிகளை அவர்கள் தைரியமாக எதிர்கொள்ள முடியும். ஹிந்து பெண்கள் முஸ்லிம்களைப் போல மதத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷிரத்தா வாக்கர் படுகொலை சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய அவர், லவ் ஜிஹாதிகள் உங்கள் கழுத்தை குறிவைக்கும் முன்பாக நீங்கள் அவர்கள் கழுத்தை துண்டிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக அலோட் நகரில் உள்ள அனாதி கல்பேஷ்வர் கோவிலில் வழிபட்டு அவர், ஓம் மற்றும் அல்லா ஒன்றுதான் என்று பேசிய ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மெளலானா அர்ஷத் மதானிக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

ஹிந்துமதம் பற்றி மதானிக்கு எதுவும் தெரியாது. இந்தியா என்றால் ஹிந்து நாடு. அது எதிர்காலத்திலும் ஹிந்து நாடாகவே இருக்கும் என்றார்.

ஜைனத் துறவி ஆச்சார்ய லோகேஷ் முனி மற்றும் இதர துறவிகள் மதானியின் அறிக்கையை புறக்கணித்தது சரியான நடவடிக்கைதான் என்று குறிப்பிட்ட சாத்வி பிராச்சி, நம் நாட்டிற்கு அதுபோன்ற துறவிகள்தான் தேவை என்றார்.

1947 ஆம் ஆண்டில் நாட்டில் பிரிவினை ஏற்பட்டதற்கு மதானி போன்றவர்கள்தான் காரணம். மதானியின் முன்னோர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மதம் மாறியவர்கள். இப்போது அவர் தாய் மதத்துக்கே திரும்பும் நேரம் வந்துவிட்டது. இந்தியாவை ஹிந்து ராஷ்டிரம் என்று அறிவிக்க வேண்டும் என்ற தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரியின் கோரிக்கையை தாம் ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜாமியத் உலேமா-இ-ஹிந்த (மஹ்மூத் மதானி பிரிவு) அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய மெளலானா மஹ்மூத் மதானி, இஸ்லாம் பிறந்த இடம் இந்தியாதான், இந்தியா எங்களுக்குத்தான் சொந்தம், பிரதமர் நரேந்திர மோடிக்கோ அல்லது ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பகவத்கோ சொந்தமானது அல்ல என்று பேசியிருந்தார்.

இஸ்லாம் வெளியிலிருந்து வரவில்லை. இஸ்லாம் பிறந்தது இங்குதான் என்று மதானி கூறியுள்ளதற்கு ஹிந்து சேனை அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இது தொடர்பாக ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மதானிக்கு எதிராக போலீஸில் புகாரும் அளித்துள்ளனர்.

சாத்வி பிராச்சி என அழைக்கப்படும் பிராச்சி ஆர்யா, உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுவாமி பரமானந்த கிரிஜி மஹராஜின் சீடர். ஹரித்வாரில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்த அவர், பல நகரங்களுக்கும் சென்று ஆன்மிகத்தையும் ஹிந்துதர்மத்தையும் பரப்பி வந்தார். வேதங்கள், உபடநிடதங்களை கற்ற அவர், ஆர்.எஸ்.எஸ்.ஸின் பெண்கள் அமைப்பான ராஷ்ட்ரீய சேவிகா சமிதியின் உறுப்பினர். விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பில் சேர்ந்து பணியாற்றி முக்கிய தலைவர்களில் ஒருவரானார்.

2016 ஆம் ஆண்டில் ஜாகிர் நாயக்கின் தலையை கொண்டுவருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். வன்முறையைத் தூண்டியதாக அவர் மீது வழக்கும் உள்ளது.

நுரையீரலுக்கு நன்மை செய்யும் நொச்சி இலை பற்றி தெரியுமா?

குழந்தைகள் படிச்சதை மறக்காம இருக்க பாலோ பண்ண வேண்டிய 4 விஷயங்கள்!

இனி வரும் காலங்களில் ஆன்லைன் ஷாப்பிங்கை வடிவமைக்கப்போகும் 8 முக்கிய விஷயங்கள்....

சிறுகதை - பறக்கும் ஆசைகள்!

இது மட்டும் தெரிஞ்சா உங்க உணவுகளில் தக்காளி அதிகமா சேர்க்க மாட்டீங்க!

SCROLL FOR NEXT