மகாராஷ்டிரத்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்குச் சொந்தமான இடத்தை மும்பை வழக்குரைஞர் ஒருவர் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார். அந்த இடத்தின் சர்வே எண்ணும் ஏலத் தொகையும் எண் கணிதப்படி ஒத்துவந்ததால் அந்த இடத்தை வாங்கியிருப்பதாக அஜய் ஸ்ரீவாஸ்தவா என்னும் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த இடத்தில் ஒரு சனாதனப் பள்ளியை நிறுவவும் திட்டமிட்டுள்ளாரம்.
நான் ஒரு சனாதன இந்து. பண்டிதர்கள் வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறோம். எண் கணிதப்படி அந்த இடத்தின் சர்வே எண்ணும் நான் கேட்ட ஏலத் தொகையும் எனக்கு சாதகமாக இருந்ததால் அந்த இடத்தை வாங்கினேன். அந்த இடத்தை முறைப்படி பதிவு செய்தபிறகு அங்கு சனாதனப் பள்ளி ஏற்படுத்தப்படும் என்றார் ஸ்ரீவாஸ்தவா.
ஸ்ரீவாஸ்தவா, தாவூத்தின் சொந்த கிராமத்தில் குழந்தை பருவத்தில் வசித்த வீடு உள்பட மூன்று சொத்துக்களை ஏற்கெனவே வாங்கியிருக்கிறார். கடந்த 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மும்பை நாக்படாவில் தாவூதுக்குச் சொந்தமான இரண்டு கடைகளை வழக்குரைஞர் ஸ்ரீவாஸ்தவாதான் ஏலம் எடுத்தார். அப்போது ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.
பின்னர் 2020 இல் மும்பாகே கிராமத்தில் தாவூத் குழந்தை பருவத்தில் வசித்த வீட்டை ஏலத்தில் வாங்கினார். ஆனால், ஆவணங்களில் சில முரண்பாடுகள் இருப்பதால் அதற்கான பத்திரம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. தவறுகள் திருத்தப்பட்டு விரைவில் வீட்டுப் பத்திரம் கிடைக்கும் என ஸ்ரீவாஸ்தவா நம்புகிறார்.
2020 இல் நான் தாவூத்தின் பங்களாவை ஏலத்தில் எடுத்தேன். இதற்காக சனாதன தர்ம பாடசாலை அறக்கட்டளையும் ஏற்படுத்தப்பட்டது. அந்த இடம் பதிவு செய்யப்பட்டதற்கான பத்திரம் கிடைத்ததும் அங்கு சனாதன பள்ளியை தொடங்க இருக்கிறேன் என்றார் அவர்.
கடந்த வெள்ளிக்கிழமை தாவூத்துக்கு சொந்தமான நான்கு சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. எனினும் இதில் இரண்டு நிலங்களை வாங்க யாரும் முன்வரவில்லை. 1,730 சதுர மீட்டர் கொண்ட இடம் ரூ.3.28 லட்சத்துக்கு ஏலம் போனது. 170.98 சதுர மீட்டர் நிலத்தை அஜய் ஸ்ரீவாஸ்தவா ரூ.2.01 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.