செய்திகள்

பேணி வளர்த்த தந்தையரைப் போற்றுவோம்.

ஜூன் 18 – உலக தந்தையர் தினம்!

கே.என்.சுவாமிநாதன்

லகெங்கும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாகக் கொண்டாடப் படுகிறது. தந்தையரை கௌரவிக்கும் விதமாக தந்தையர் தினம் 1910ல் வாஷிங்டனில் துவங்கப்பட்டது.

கூட்டுக் குடும்பம் என்ற வாழ்வு முறை இல்லாத காரணத்தால் மேலை நாடுகளில் தந்தையர் தினம், அன்னையர் தினம் என்ற விசேட நாட்களுக்கு அவசியம் நேர்கிறது. தந்தை, தாயிடம் தொடர்பு இருந்தாலும் அவர்களிடம் போதுமான பிணைப்பு இருப்பதில்லை. எனவே தந்தையர் தினம், அன்னையர் தினம் போன்ற விசேஷ நாட்களில் தாய், தந்தையரைப் போய் பார்ப்பதும், அளவளாவி மகிழ்வதும், பரிசளித்து மகிழ்வூட்டுவதும் நடை பெறுகிறது.

தந்தையர் தினத்திற்கு வித்திட்ட பெருமை வாஷிங்டனைச் சேர்ந்த சொனோரா ஸ்மார்ட் டாட் என்ற பெண்ணைச் சாரும். இளம் வயதில் தாயை இழந்த இந்தப் பெண்ணையும், மற்ற உடன் பிறப்புகளையும் வளர்த்து ஆளாக்கியது அவர்களது தந்தை வில்லியம் ஜாக்ஸன் ஸ்மார்ட். இவர் அமெரிக்காவின் உள்நாட்டுப் போரில் பங்காற்றியவர். 1909ஆம் வருடம் அன்னையர் தினம் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சொனோரா, அன்னையரைப் போற்றுவது போலத் தந்தையை கௌரவிக்கும் தினம் கொண்டாடப் பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதற்கு பலத்த வரவேற்பு இருந்தது. ஆகவே, முதல் தந்தையர் தினம் 1910ஆம் வருடம் ஜூன் மாதம் 19ஆம் தேதி, மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை  அனுசரிக்கப்பட்டது. வில்லியம் பிறந்தது ஜூன் மாதத்தில்.

1924ஆம் வருடம் அமெரிக்க அதிபர் கால்வின் கூலிட்ஜ் தந்தையர் தினத்திற்குத் தன் ஆதரவை அளித்தார். ஆனால், அமெரிக்கா நாடு முழுவதும் கொண்டாடு வதற்கான அங்கீகாரம் 1965ஆம் வருடம் அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன் அவர்களால் அளிக்கப்பட்டது. 1972ஆம் வருடம் அதிபர், ரிச்சர்ட் நிக்சன், ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாக அறிவித்ததுடன்  அந்த நாளை பொது  விடுமுறை நாளாகவும் அறிவித்தார்.

அமெரிக்காவில் ஆரம்பித்த தந்தையர் தினம் மற்ற நாடுகளுக்கும் பரவி, பெரும்பாலான நாடுகள் இந்தியா உட்பட ஜூன், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாக கொண்டாட ஆரம்பித்தன. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்த் செப்டம்பர் மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையும், ப்ரேசில் ஆகஸ்ட் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும் தந்தையர் தினமாகக் கடைப் பிடிக்கின்றன. தாய்லாந்த் அரசு, அரசரின் பிறந்த நாளான டிசம்பர் 2ஆம் தேதியை தந்தையர் தினமாக வைத்துள்ளது.

பல மேற்கத்திய நாடுகளில், தந்தையர் தினத்தன்று, தந்தை உயிரோடிருந்தால் சிகப்பு ரோஜா அணிந்தும், தந்தை இல்லாவிட்டால் வெள்ளை ரோஜா அணிந்தும் இந்த நாளை அனுசரிப்பர். இந்த நாள் தந்தையை மட்டுமல்லாது, ஒரு தந்தையின் பணியைச் செய்கின்ற தாத்தா, மாமா ஆகியோரை கௌரவிக்கும் நாளாகவும் நடத்தப்படுகிறது.

பண்டிகைகளைப் போலவே, தந்தையர் தினம் போன்ற சிறப்பு நாட்களும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது என்று சொல்லலாம். இந்த நாளில் தந்தையரின் மகிழ்ச்சிக்காக மகன் அல்லது மகள் வாழ்த்து அட்டைகள், புது ஆடைகள், பெல்ட், டை, காலணிகள், பரிசு அட்டைகள், தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள், கணிணி, ஐபாட், எக்கோ டாட் போன்ற மின்னணு சாதனங்கள், பரிசு அட்டைகள், வெளியூர் பயணம் என்று செலவு செய்கிறார்கள்.

இந்த வருடம் அமெரிக்காவில் தந்தையர் தின விற்பனை 22.9 பில்லியன் டாலர்களை (2290 கோடி டாலர்கள்) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இது 1,87,574 கோடி. இது 2015ஆம் ஆண்டு விற்பனையை விட 180 சதவிகிதம் அதிகம்.

சிறுவயது முதலே “அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்”, “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்று சொல்லிக் கொடுத்து வளர்க்கப் பட்டவர்கள். பெரும்பாலும் கூட்டுக் குடும்ப முறை உள்ள நமது நாட்டில் இதற்கு அவ்வளவாக ஈர்ப்பு இல்லை என்றாலும், மாறி வருகின்ற சூழ்நிலையில் நம் நாட்டிற்கும் இதைப் போன்ற நினைவுறுத்தும் நாட்கள் தேவைப்படும் என்று தோன்றுகிறது. பல குடும்பங்களில் மகன்/மகள் குடும்பத்தினர் அயல் நாட்டில் வசிக்க, பெற்றோர் தனியாகவோ அல்லது முதிய குடிமக்கள் இல்லத்திலோ இருக்கும் நிலை பெருகி வருகிறது.

சிறு வயதில் நமது ஒவ்வொரு தேவைகளையும் அறிந்து, முடிந்தவரை அவற்றை நிறைவேற்றுகிறார் தந்தை. ஆனால், முதுமையில் அவரது உணர்ச்சிகளையும், தேவையையும் அறிந்து அவர் அமைதியான வாழ்க்கை வாழ வழி செய்கிறோமா என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT