பான் என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. பல்வேறு முறை அவகாசம் தரப்பட்டு நீட்டிக்கப்பட்டது. ஆனால், கோடிக்கணக்கானவர்கள் இன்னும் பான் எண்ணோடு தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்கவில்லை.
மார்ச் இறுதிக்குள் பான் எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், பான் கணக்கு எண் செயலற்றதாகிவிடும். ஏப்ரல் 2023 முதல் ஆதார் எண்ணை இணைக்கப்படாத பான் எண்களை செயலிழக்கச் செய்ய வருமானவரித்துறை முடிவு செய்திருக்கிறது. இல்லாவிட்டால் 1000 ரூபாய் அபராதம் செலுத்தி இணக்க வேண்டியிருக்கும் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இந்தியாவில் இதுவரை 61 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 48 கோடி பான் எண்களோடு ஆதார் எண்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டுவிட்டன. வருவான வரி விதிவிலக்கு பெற்றவர்களும் பான் எண்ணை ஆதார் எண்ணோடு இணைத்தாகவேண்டும். ஆனால், ஏனோ தயக்கம் தெரிகிறது.
ஏறக்குறைய 13 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்டாக வேண்டும். வருமான வரி விலக்கு பிரிவினர் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் மார்ச் இறுதிக்குள் இணைத்துவிடுவார்கள் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இணைக்காவிட்டால் பான் கார்டு முடக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட பான் எண்ணை கொண்டு நடத்தப்படும் வணிக நடவடிக்கைளும் முடக்கப்படும் என்று அமைச்சக அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
பான் கார்டு செயலற்றதாகிவிட்டால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூலமாக எந்தவொரு நிதி சார்ந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது. கே.ஒய்.சி என்று அழைக்கப்படுகிற வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களில் 'பான்' எண் முக்கிய இடம் வகிப்பதால், அனைத்து நிதி சார்ந்த நடவடிக்கைகளும் முடங்கிப் போய்விடும்.
பான் எண்ணையும் அடையாள அட்டையாக காட்ட முடியும் என்று சமீபத்தில் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்திருப்பதால் பான் கார்டையும் ஆதார் எண்ணோடு இணைத்து அப்டேட்டாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.