மகாராஷ்டிரத்தில் சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி அரசில் அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்களான சக்கன் புஜ்பல், திலிப் வால்ஸே பாட்டீல், ஹஸன் முஷ்ரிப், தனஞ்செய் முண்டே, சஞ்சய் பன்ஸோடே, அதிதி தட்கரே மற்றும் தரம்ராவ் பாபா அட்ரம் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்று பத்து நாட்களாகியும் இன்னும் அவர்களுக்கு அமைச்சரவையில் இலாகா ஒதுக்கப்படாமல் உள்ளது. இதற்கு காரணம் நிதி மற்றும் திட்டத்துறை பொறுப்புகளை யார் வைத்துக் கொள்வது என்பதில் அஜித் மற்றும் ஷிண்டே கோஷ்டியினருக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதே காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதித்துறையும், கூட்டுறவுத்துறையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினருக்கு தரப்படவேண்டும் என்பதில் அஜித்பவார் பிடிவாதமாக இருக்கிறார். ஆனால், இந்த துறைகளை விட்டுக் கொடுக்க ஷிண்டே தரப்பினர் தயாராக இல்லை.கடந்த முறை நிதித்துறையை அஜித்பவார் சரிவர கையாளவில்லை என்பது ஷிண்டே கோஷ்டியினரின் குற்றச்சாட்டாகும். நிதிகளை வழங்குவதில் அஜித்பவார் பாரபட்சமாக செயல்பட்டதாகவும், தேசியவாத காங்கிரஸ்
தலைவர்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதாகவும் ஷிண்டே தரப்பினர் புகார் தெரிவிக்கின்றனர்.சஞ்சய் ஷிர்சாத், குலாப்ராவ் பாட்டீல், தீபக் கேசர்கர், பரத் கோகவாலே, ஷஹாஜிபாபு பாட்டீல் உள்ளிட்டோர் அஜித்பவாருக்கு எதிராக வெளிப்படையாகவே இது குறித்து புகார் தெரிவித்திருந்தனர். அஜித்பவாருக்கு நிதித்துறை இலாக ஒதுக்க்க்கூடாது என்பது அவர்களின் வாதம்.
அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு குறித்து அஜித்பவார், ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னவிஸுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இலாகா ஒதுக்கீட்டில் ஏன் தாமதம் என்று புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் சக்கன் புஜ்பலிடம் கேட்டபோது, யாருக்கு எந்த இலாகா என்பது பற்றி விவாதித்து வருகிறோம். விரைவில் அறிவிப்போம் என்று கூறினாரே தவிர தாமத்த்துக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
நிதித்துறை தவிர கூட்டுறவுத்துறையும் தங்களுக்கு தரப்பட வேண்டும் என்று அஜித்பவார் வலியுறுத்தி வருகிறார். ஏனெனில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் கூட்டுறவு அல்லது தனியா சர்க்கரை ஆலையை நடத்தி வருகின்றனர். மேலும் கூட்டுறவு வங்கிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே கூட்டுறவுத்துறை தங்கள் கைக்கு வந்தால்
பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும் என நினைக்கின்றனர்.அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாததால் அவர்கள் அலுவலகத்துக்கு வந்து பணிகளை ஏற்க முடியவில்லை. அதனால் அவர்கள், தங்கள் தொகுதியை சுற்றியே வலம் வந்த வண்ணம் உள்ளனர்.
இது பற்றி பா.ஜ.க. மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவன்குலேவிடம் கேட்டபோது, இலாகா ஒதுக்கீடு என்பது முதல்வரின் தனிப்பட்ட உரிமை. விரைவில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஷிண்டே, தேவேந்திர பட்னவிஸ், அஜித்பவார் இடையே நல்லுறவு உள்ளது. எனவே இலாகா ஒதுக்கீட்டில் எந்த பிரச்னையும் இருக்காது. விரைவில் அமைச்சரவை விரிவாக்கமும் நடைபெறும் என்றார்.