செய்திகள்

தக்காளி விற்று லட்சாதிபதியான மகாராஷ்டிர விவசாயி!

ஜெ.ராகவன்

நாடு முழுவதும் தக்காளி விலை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ள நிலையில் மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் 13,000 பெட்டிகள் தக்காளியை ரூ.1.5 கோடிக்கு விற்றுள்ளார்.

நாடு முழுவதும் விலை உயர்ந்துள்ளதால் தக்காளி இப்போது ஆடம்பர பொருளாக மாறியுள்ளது. அதாவது தங்கத்துக்கு நிகராக தக்காளி கருதப்படுகிறது. தமிழகம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தக்காளி கிலோ ரூ.140 வரை விலை வைத்து விற்கப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் தக்காளி விலையை கேட்டால் நீங்கள் மயங்கி விழுந்துவிடுவீர்கள். அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்கப்படுகிறது. விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சாதாரணமாக கிலோ ரூ.20 அல்லது ரூ.30-க்கு விற்கப்படும் தக்காளி தற்போது கிலோ ரூ.100-க்கு மேல் விலை வைத்து விற்கப்படுவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு ஒரு கிலோ தக்காளி வாங்கியவர்கள் இப்போது விலை அதிகம் என்பதால் கால் கிலோ மட்டுமே வாங்கி வருகின்றனர்.

பருவநிலை மாற்றம் மற்றும் தக்காளிக்கு நல்ல விலை கிடைக்காததால் விவசாயிகள் வேறு பயிர்சாகுபடிக்கு மாறியதால் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது இப்படி இருக்க மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டம், நாராயண்கஞ்ச் என்னுமிடத்தைச் சேர்ந்த துக்காராம் பாகோஜி காயேகர் என்பவர் தக்காளியை விற்றே லட்சாதிபதி ஆகிவிட்டார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு 18 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 12 ஏக்கரில் தக்காளி பயிரிட்டார். மகன் ஈஸ்வர் காயேகர் மற்றும் மருமகள் சோனாலி ஆகியோரும் தக்காளி சாகுபடி செய்ய இவருக்கு உதவியாக இருந்தனர். பெரிய பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்ததால் அதற்கு உரம், பூச்சிக்கொல்லி போட்டு பாதுகாத்து தரமான தக்காளியை சாகுபடி செய்தனர்.

தக்காளி விளைச்சல் நன்றாக இருந்ததால், ஒரு கிரேட் (பெட்டி) தக்காளியை ரூ.2100-க்கு விற்றனர். கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் இப்படி 900 கிரேட் தக்காளியை விற்று ரூ.18 லட்சம் வருமானம் பார்த்தனர்.

கடந்த மாதம் தக்காளியின் தரத்துக்கு ஏற்ப ஒரு கிரேட் ரூ.1,000 முதல் ரூ.2400 வரை விலைவைத்து விற்றனர். புனே மாவட்டம், ஜுன்னார் என்ற இடத்தில் உள்ள பல விவசாயிகள் தக்காளி பயிரிட்டு விற்று லட்சாதிபதிகளாகிவிட்டனர்.

தக்காளி வியாபாரிகள் ஒன்று சேர்ந்து கடந்த ஒரு மாதததில் ரூ.80 கோடிக்கு தக்காளி விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் அந்தப் பகுதியைச் சேர்ந்த 100 பெண்களுக்கு வேலையும் கொடுத்துள்ளனர்.

துக்காராமின் மருமகள் சோனாலி தக்காளி பயிரிடுவது, அறுவடை செய்வது மற்றும் பேக் செய்வது போன்ற வேலைகளை செய்து வந்த நிலையில், மகன் ஈஸ்வர் விற்பனையையும் நிர்வாகத்தையும் கவனித்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்கள் இவர்கள் கடுமையாக உழைத்ததாலும், மார்க்கெட்டில் தக்காளி விலை உச்சத்தில் இருந்ததாலும் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளது.

நாராயண்கஞ்சில் உள்ள ஜுன்னு வேளாண் பொருள்கள் விற்பனை சந்தையில் 20 கிலோ கொண்ட நல்ல தரமான தக்காளி ரூ.2,500-க்கு விலைபோயுள்ளது. அதாவது சராசரியாக ஒரு கிலோ ரூ.125-க்கு விற்கப்பட்டுள்ளது.

தக்காளி விற்பனை மூலம் லட்சாதிபதி ஆனவர்கள் மகாராஷ்டிர விவசாயிகள் மட்டுமல்ல, கர்நாடக மாநிலம், கோலாரில் இந்த வாரம் ஒரு விவசாய குடும்பத்தினர் 2,000 பெட்டிகள் தக்காளியை விற்பனை செய்து ரூ.38 லட்சத்தை அள்ளிச் சென்றனர்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT