ஆந்திர பிரதேசத்தில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைதுசெய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
2019-ல் முதல்-மந்திரியாக இருந்தபோது திறன் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.371 கோடி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ராஜமுந்திரியில் உள்ள மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அமராவதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மகளிர் அணியினர் சாலையில் படுத்து போராட்டம் நடத்திய நிலையில், போராட்டக்காரர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைதுசெய்தனர்.
சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு சில இடங்களில் டயர்களை கொளுத்தியும், பேருந்துகள் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதேபோன்று, திருப்பதி, மேற்கு கோதாவரி, ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடந்தது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் கைதை தாம் விரும்பவில்லை என்று கூறியுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, எந்தத் தவறாக இருந்தாலும் கலந்துபேசி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.