செய்திகள்

இரும்பு எஃகு அங்காடியில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு...

கல்கி டெஸ்க்

 

சென்னை திருவற்றியூரை அடுத்துள்ள சாத்தாங்காடு பகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கீழ் அமைந்துள்ள இரும்பு எஃகு அங்காடியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் , 203 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ''சாத்தாங்காடு இரும்பு எஃகு அங்காடி . இங்கு 850 தொழில் மையங்கள் அமைக்கும் வசதி உள்ளது‌. இந்த அங்காடி மூலம் சுற்றுவட்டப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முன்னேற வாய்ப்பாக அமைந்தது.

30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த அங்காடி பகுதியை தற்போது மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன்படி அங்காடி பகுதி உள்ளேயே மருத்துவமனை, வாகன பழுது பார்ப்பு மையம், எடை மேடை, துணை மின் நிலையம், உணவகம் போன்றவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இடத்துக்கு பேருந்துகள் வந்து செல்லவும் ஏற்பாடு செய்யப்படும்.

இதன் மூலம் இந்த இடம் தொழில் ரீதியாக வளர்ச்சி பெறும். 3 ஆண்டுகளில் இந்த அங்காடி பகுதி மேம்பாட்டு பணிகள் முடிக்கப்படும். சென்னையின் மூன்றாவது மாஸ்டர் பிளான் வரைவு திட்ட பணி 2026 ஆம் ஆண்டு தொடங்கும். தற்போது முதல் மற்றும் இரண்டாவது மாஸ்டர் பிளான் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவை உள்ள திட்டங்கள் உள்ளடக்கி சென்னையின் மூன்றாவது மாஸ்டர் பிளான் அமையும் என்றார் அமைச்சர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பற்றி ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர், பாரிமுனையில் இருந்த பேருந்து நிலையத்தை கோயம்பேடுக்கு மாற்றும்போது பொது மக்களுக்கு ‘வெகுதூரம் செல்ல வேண்டுமே’ என்ற ஒரு அச்சம் இருந்தது. ஆனால் தொலைநோக்கு திட்டத்தில் அமைக்கப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம் இப்போது மக்களுக்கு பெரும் பயனாக இருக்கிறது. இதேபோன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையமும் நல்ல முன்னேற்றம் அடையும். அதற்காக மெட்ரோ ரயில் சேவையை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை விரிவுபடுத்த மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்றார் அமைச்சர் சேகர் பாபு.

தற்போது வட சென்னை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மாதவரம் பேருந்து நிலையம் பொது மக்களுக்கு பெரும் பயனாக உள்ளது. தேவை உள்ள இடங்களில் துணை பேருந்து நிலையங்களும் கொண்டு வரப்படும். வட சென்னையில் கனரக வாகனங்கள் நிறுத்த இடம் கிடைத்தால் அங்கு கனரக வாகன நிறுத்தும் இடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

SCROLL FOR NEXT