தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை 234 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.
இந்த திட்டத்தின் மூலம் பள்ளி வளாகங்களின் கட்டுமானத்தை மேம்படுத்தவும், மாணவர்களின் கற்கும் திறனை அதிகப்படுத்தவும் களத்திற்கு சென்று மாணவர்களோடு உரையாடி ,அவர்களுடைய தேவைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றி தருவதற்காக "நம் பள்ளி நம் பெருமை 234/ 77" என்ற இந்த திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில மகேஷ் பொய்யாமொழி 48 வது சட்டமன்ற தொகுதியாக கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீர் கள ஆய்வு மேற்கொண்டார். அந்த பள்ளி வளாகத்தில் கட்டமைப்புகள், கழிவறைகள், உணவு கூடங்கள், கணியறைகள், வகுப்பறைகளுக்குள் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களிடம் உரையாடி கருத்துக்களை கேட்டு அறிந்தார்.
தொடர்ந்து பள்ளியின் ஆசிரியர்கள் நிர்வாகிகள் உடன் பள்ளியின் தரத்தை மேலும் உயர்த்துவதற்கான ஆலோசனைகளையும், கருத்துகளையும் கேட்டறிந்தார். அமைச்சரின் திடீர் வருகையால் பள்ளி வளாகம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரம் மாணவர்களுடன் அமைச்சர் சிரித்து பேசியதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் அந்தப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு குழந்தைகளுக்கான வட்டார வள மையத்தினை ஆய்வு செய்து சிறப்பு குழந்தைகளுக்கும் தடையில்லா கல்வி கிடைப்பதை உறுதி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆசிரியர்கள் ஆலோசித்தார்.
அப்போது அமைச்சர், நம் பள்ளி நம் பெருமை என்ற திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை உலக தரத்தில் உயர்த்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் மாணவர்களின் கற்கும் திறனையும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.