கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி, மத்திய அரசு, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது.
மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து 58 மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையில் ஐவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. நீதிபதி நசீர் வருகிற ஜனவரி 4 ஆம் தேதி ஓய்வுபெற இருப்பதால் ஜனவரி 2 இல் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
இதனிடையே கடந்த 7 ஆம் தேதி மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் 2016 நடவடிக்கை தொடர்பான ஆவண பதிவுகளை தயாராக வைத்திருக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.
நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ரிசர்வர் வங்கி தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி மற்றும் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ப.சிதம்பரம் மற்றும் ஷியாம் திவான் ஆகியோரிடம் விசாரணை நடத்தி அவர்களின் வாதங்களை பதிவு செய்தது.
மூத்த வழக்குரைஞர் ப.சிதம்பரம் வாதிடுகையில், ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் எந்த குறிப்பிட்ட பலனும் ஏற்படவில்லை. இது தொடர்பாக தன்னிச்சையாக அரசு நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. ரிசிர்வ் வங்கியின் மத்திய குழு பரிந்துரையின் பேரிலேயே நடவடிக்கை எடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டினார்.
2016 ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்க்கும் வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, உறுதியான நிவாரணம் வழங்கமுடியாத இந்த வழக்கில் நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறியிருந்தது.
முன்னதாக ரிசர்வ் வங்கி வாதங்களை முன்வைத்தபோது, “இதில் தாற்காலிக கஷ்டங்கள் இருக்கலாம்; அவைகூட தேசத்தை கட்டி எழுப்புவதற்கான செயல்பாட்டின் ஒரு பகுதியாகும்” என்று ஒப்புக்கொண்டது. பிரச்னைகள் எழும்போது அதற்கு தீர்வுகாண வழிமுறை தேவை என்றும் சுட்டிக்காட்டியது.
சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை சரியான முடிவுதான். கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வது, கள்ள நோட்டுகளை ஒழிப்பது, வரி ஏய்ப்பை தடுப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு உத்தரவு செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் வருகிற ஜனவரி 2 ஆம் தேதி தீர்ப்பளிக்க உள்ளது.