மாநகராட்சி
மாநகராட்சி  
செய்திகள்

பருவமழை சீசன் ஓவர் - கோடைக்காலத்தை சமாளிக்க முடியுமா?

ஜெ. ராம்கி

தமிழகம், புதுச்சேரி போன்ற கடலோரப் பகுதிகளில் பெரும் மழையைக் கொண்டு வரும் வடகிழக்கு பருவமழை சீசன் முடிந்துவிட்டது. இனி மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள். இந்நிலையில் சென்னையில் இன்று அதிகாலை மிதமான மழை பெய்திருக்கிறது.

ஆண்டுதோறும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை வடகிழக்குப் பருவமழைக் காலமாகக் கணக்கிடப்படுகிறது. கடந்த ஆண்டு பருவமழை சீசன் ஆரம்பமாகும்போது, அதிகபட்ச மழை பெய்யும் என்றார்கள். பருவமழை விஷயத்தில் ஏனோ கணிப்புகள் தவறுவது அதிகமாகிவிட்டது.

வடகிழக்கு பருவமழை, ஒரு சதவீதம் மட்டுமே அதிக மழையை தந்திருக்கிறது. ஆனால், தென்மேற்கு பருவமழை, கூடுதலாக 45 சதவீத மழையை தந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கடந்த ஆண்டில் பெய்த மழையின் அளவு 22 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இதுவரை பெய்த மழைகளால் சென்னை மாநகர பகுதிகளில் 5 அடி வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. ஆனால், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் எதிர்பார்த்த அளவு உயரவில்லை என்பதுதான் உண்மை. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக பராமரிக்காததால் நிலத்தடியில் போதிய நீர் தங்குவதில்லை.

இந்நிலையில் சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளின் தண்ணீர் வரத்து குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டியிருக்கிறது. சென்னை பெருநகர மாநகராட்சியின் குடிநீர் மாற்று வாரிய இணையத்தளம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாத இறுதிக்குள் இணையத்தளம் தயாராகிவிடும் என்கிறார்கள். சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் கொள்ளளவு, அங்கிருந்து நீர் வெளியேறும் அளவு உள்ளிட்டவை உடனுக்குடன் இணையத்தளத்தில் கிடைக்கும்.

நிலத்தடி நீரை கணக்கிடுவதற்காக சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் நிலத்தடி நீர் அளவுமானிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் நிலத்தடி நீர் இருப்பு நிலவரம் கணக்கிடப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் மற்றும் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு, குடிநீர் விநியோகம் ஆகியவற்றை கண்காணித்து வருகிறோம் என்கிறார்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள். எப்படியோ, கோடையை சமாளித்துவிட்டால் போதும்!

முருகப்பெருமானின் அர்த்தமுள்ள திருநாமக் காரணங்கள்!

லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!

கேன்சரை தடுக்கும் 7 வகை வெஜிடேரியன் உணவுகள் தெரியுமா?

வெப்பம் வாட்டி வதைக்குதா? இந்த தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம் ட்ரை பண்ணி பாருங்களேன்! 

வேதங்கள் வழிபட்ட சிவபெருமான் எங்கு வீற்றிருக்கிறார் தெரியுமா?

SCROLL FOR NEXT