செய்திகள்

தேசிய பெண் குழந்தைகள் தினம் (24-01-2023)

சேலம் சுபா

 பெண்களை தெய்வமாக சித்தரித்துக் கொண்டாடும் நம் நாடுதான் இந்தியா. ஆனால் உண்மை நிலை? பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறைவாக உள்ள நாடுகளில் முன்னணியில் இந்தியா இருப்பதை சமீப காலங்களில் நம் நாட்டில் நிகழும் பெண் குழந்தைகளின் மீதான வன்கொடுமைகள் மூலம் கண்கூடாக அறியலாம். வயது வித்தியாசமின்றி சக குடும்பத்தினராலேயே குழந்ததைகள் பாதிக்கப்படுவது வேதனையான ஒன்று.

          சிறந்த கல்வியுடனும் அடக்குமுறையற்ற சுதந்திரத் துடனும் யாரையும் சார்ந்து இராமல் தலை நிமிர்ந்து வாழ்வதுமாக சமூகத்தில் பெண்களின் நிலை உயரவேண்டும். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கிலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதற் காகவும் 2008 ஆம் ஆண்டு இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஜனவரி 24ஆம் தேதியை தேசிய பெண் குழந்தைகள் தினமாக அறிவித்தது அதன்படியே ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் தேசிய பெண்  குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

      பெண் கல்வியில் பெரும் முன்னேற்றம் என பெருமை கொண்டாலும், முழுமையான உயர்கல்வி இன்னும் பெண்களுக்குக் கிடைக்கவில்லை என்பதே நிஜம். சாதிய வழியில் பெண் கல்வி கற்கும் சுதந்திரம் தடைபடுவது ஒருபுறம் என்றால், கிராமப்புறங்களில் பெண் வயதுக்கு வந்தவுடன் கல்வி கற்பதில் தடை விழுந்து விடுவது உண்மை. நகர்ப்புறங்களை சேர்ந்த பெண்களுக்கோ வெளியே கல்வி பயில செல்லும் பெண்  காதல் வயப்பட்டு குடும்ப கவுரவத்தை பாதித்து விடுவாளோ என்று எண்ணி அச்சம் கொண்டு, உயர் கல்விக்கான முட்டுக்கட்டை போடப்படுகிறது.

பெண் கல்வித்தடையுடன்  குழந்தைத் திருமணங்களும் இன்னும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைவாக நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கு பெற்றோரும் துணை போவதுதான் கொடுமை. குழந்தைத் திருமணம் செய்பவர்கள் மீதான புகார்களுக்கு கடும் தண்டனை இருந்தாலும் பாசம் அன்பு எனும் வேலிக்குள் கட்டுப்பட்டு பெண் குழந்தைகளின் விருப்பமின்றி திருமண சிறைக்குள் அடைக்கும் பெற்றோரும் உறவுகளும் மாறவேண்டும்.

      டுத்து பாலியல் தொந்திரவு. பெண்ணை இன்னும் போகப்பொருளாகவே நினைக்கும் ஆண்கள் இருக்கும் வரை இந்நிலை மாறப்போவதில்லை. இதற்கு ஒரே வழி பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலையைக் கற்றுத் தந்து அவர்களை துணிவாக வளர்ப்பதுதான். துஷ்டரைக் கண்டால் மோதி மிதிக்கும் துணிவு கொண்ட பெண்ணை நெருங்கினால்  ஆபத்து என்பதை தவறான சிந்தனை கொண்ட ஒவ்வொரு ஆணும் உணர்ந்து விலக வேண்டும். இங்கு 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை கட்டாயப் படுத்தி பாலியல் தொந்தரவு செய்பவர்களை சிறையில் அடைக்கவும் 10 வயதிற்கு குறைவான பெண் குழந்தைகளை கடத்தினால் அவர்களுக்கு ஜாமீனில் வெளிவராதபடி கடுமையான தண்டனையும் வழங்க சட்டம் இருக்கிறது. புகார் தர பெண்கள்தான் துணிவுடன் முன்வரவேண்டும்.

அரசு என்னதான் பல பாதுகாப்பு திட்டங்களை பெண் குழந்தைகளுக்காக நிறைவேற்றினாலும் குடும்பங்கள் தான் முதலில்  தங்கள் பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும். மாற்றங்கள் குடும்பங்களில் இருந்து வருவதே சிறந்தது.

       ஆண் குழந்தைகள் தவறு செய்தால் அது வெறும் சம்பவமாகவும் பெண் குழந்தை தவறு செய்தால் அது பெரும் செய்தியாகவும் ஆக்கப்படும். நம் சமூக கட்டமைப்பில்  பெண் குழந்தைகளின் மீதான கவனத்தை பாலின பாகுபாடு இன்றி மதிப்பு மிக்கதாக மாற்றி அவர்களின் உணர்வுகளுக்கு அங்கீகாரத்தை தர ஆண் குழந்தைகளுக்கு கற்றுத் தருவதே சிறப்பு. கல்வி சுதந்திரம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பாலியல் குறித்த கல்வியை இரு பாலருக்கும் அளிப்பது, அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்வது, ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் சமூகத்தில் அனைத்து துறைகளிலும் முன்னேறுவது, போன்றவற்றுடன் பிற்போக்கான எண்ணங்கள் கொண்ட சமூகமும் மாறவேண்டும். அன்றுதான் உண்மையில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாட முடியும்.

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி குளிர்ந்த நீரில்தான் குளிப்பீங்க! 

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

SCROLL FOR NEXT