தமிழகத்தில் அதிகளவு டெங்கு காய்ச்சல் பரவுவது போல், கேரளாவில் நிபா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. நிபா வைரஸால் ஒருவர் பலியானது, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக கேரளா மாநிலத்தில் அதிக நோய் பரவும். குறிப்பாக இந்த ஆண்டு பல்வேறு வகையான நோய்கள் பரவி, மக்களை அச்சுறுத்துகின்றன. பன்றிக்காய்ச்சல், எலி காய்ச்சல், டைபாய்டு ஆகியவற்றிலிருந்து, வெஸ்ட் நைல், ஷிகல்லா, அமீபிக் மூளைக்காய்ச்சல் என அரியவகை நோய்கள் வரை கேரளாவில் வேகமாக பரவி வருகிறது.
இப்படி நோய்கள் பரவினாலும், இதுவரை உயிர்சேதம் எதுவும் நிகழவில்லை. ஆனால், இப்போது அதுவும் ஏற்பட்டுவிட்டது. மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு அருகே உள்ள செம்பரசேரி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரசுக்கு பலியானான்.
இதனால், கேரளா அரசு நிபா வைரஸ் பரவுவதை உடனே தடுக்க வேண்டும் என்று களத்தில் இறங்கியது. இதனையடுத்து அந்த சிறுவனின் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் என்றே வந்தது.
ஆனால், கேரளா முழுவதும் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 லிருந்து 472 ஆக அதிகரித்தது. நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை, புனேவில் இருந்து வந்த தேசிய வைராலஜி நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையினான நிபுணர்கள் குழுவினர் வவ்வால்களின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நிபா வைரஸ் பரவலை கண்காணிக்க அனக்காயம் ஊராட்சியில் 95 குழுக்களும், பாண்டிக்காடு ஊராட்சியில் 144 குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு ஊராட்சிகளில் மட்டும் நேற்று சுமார் 8,376 ஆயிரம் வீடுகளில் சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்தினர். இதுவரை 26ஆயிரத்து 430 வீடுகளில் காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால், தற்போது கேரளாவில் நிபா வைரஸ் அதிகமாக பரவி வரும் சூழல் வந்துள்ளது. பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகும் வைரஸ் பரவுவதை குறைக்க முடியவில்லை. காய்ச்சல் வருவதோடு நிறுத்திக்கொண்டால் சரி, ஆனால், உயிர்சேதம் அதிகரித்தால் அபாய சூழல் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.